Monday, October 8, 2018

தேன்சிட்டும் கிராமத்தானும்

தேன்சிட்டும் கிராமத்தானும்




இன்று காலை ஒரு சிறு பறவை தனது சிறிய,  கூரிய அலகால் பூக்களோடு போர் புரிந்து கொண்டிருந்தது. நடை பயிற்சியை நிறுத்தி கவணிக்கும்படி ஈர்த்தது அந்தப் போர் காட்சி. அட! அது தேன்சிட்டு. எவ்வளவு காலம் ஆகிவிட்டது இச்சிறு பறவையை கண்ணில் கண்டு ! என்ற சிந்தனை உதித்து உதிரும்  முன்பே அப்பறவையைப் பற்றிய எனது தொடக்கப் பள்ளி காலத்து நினைவுகள் நிழலாடத் துவங்கின. 40-45 குடும்பங்களை மட்டுமே(சில ஓட்டு வீடுகள் பல குடிசைகள்) கொண்ட அச்சிறு கிராமத்தின் பல இடங்களை கற்றாலைப்பூக்களின் வாசனைகளும் பெயர் தெரியா பல வண்ணப் பூக்களின் வாசனைகளும் நிழலாடும் தருணங்களில் நம்மைத் தாக்கிக் கிறங்கடிக்கும். பள்ளி முடிந்த மாலை நேரப் பொழுதுகளை, என்சோட்டுப்  பயல்களோடு அந்த வாசனைகளுக்கு மத்தியில் தான் கழிப்பேன். அப்போது அங்கு உசாவும் பறவைகளோடு நாங்கள் கலகம் செய்வதுண்டு. சிட்டு, தேன்சிட்டு, மைனா என பல பறவைகள் அங்கு அதிகம் வந்து போனாலும் எங்களின் கவனத்தை இந்த தேன்சிட்டு என்ற பறவை ஈர்க்கும். அன்றைய பொழுதுகளில் எங்களை ஈர்த்ததற்கு  அதன்  (தேன்சிட்டுவின்) துரு துருப்பு  காரணமாக  இருந்திருக்கலாம். கற்களால் வீசி எறிந்து அப்பறவைகளை கலைந்தோடச் செய்து மகிழ்ச்சி கொள்ளும் பருவம் அது. அன்றைக்கு அப்படித்தான் என் தோழன் எரிந்த கல் ஒரு தேன்சிட்டுவைக்  கொன்றது. மகிழ்ச்சியில் குத்தாட்டமிட்ட நானும் எனது நண்பர்களும் தேன்சிட்டுவிற்கு இறப்புச் சடங்கு செய்யத் திட்டமிட்டு,  பாடை கட்டி ஊர்வலம் தூக்கி முறையாக அடக்கம் செய்தோம். மனித உடல்களுக்கான இறப்புச் சடங்கில் அழுகுரல் இருக்கும். நாங்கள் நிகழ்த்திய இறப்புச் சடங்கில் சிரிப்பொலிகள் மட்டுமே. இன்றைக்கு இந்த நினைவு என்னை குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. என்றாலும் , அன்றைக்கு எங்களின் அந்தக் கொலைகளாள் மட்டும் தேன்சிட்டு இனம் அழிந்து விடவில்லை. மிக அதிகமாக எங்கள் கிராமத்தில் உலாவிக் கொண்டிருந்த கத்தாலைக் குருவிகளும் சிட்டுக்களும் இன்றைக்கு அருகிப் போன பறவை இனங்களாக மாற்றப்பட்டுள்ளன. 40 வீடுகள் நூற்றுக்கும் அதிகமான வீடுகளாக மாற்றம் பெற்றது. அடர்ந்த செடி, கொடி, மரங்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது. உறவாடிய உயிர்கள் அவற்றின் பெயர்களைத் தெரிந்து கொள்ளும் அறிவு பெறும் முன்னே உருத் தெரியமல் அழிந்து, பாட புத்தகங்களில் அச்சேறியது.  பத்து பதினைந்தாண்டு வளர்ச்சி பற்றி எரியுது வயிறு.
ஜோ.செ. கார்த்திகேயன்
07 October 2016

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...