Tuesday, September 18, 2018

மீசை என்பது வெறும் மயிர்


மீசை என்பது வெறும் மயிர்



சாதி, சமயம் கடந்து மனித சமத்துவத்திற்காகப் போராடிய ஆளுமைகளை (பெரியார், அம்பேத்கர் போன்றோரை) அந்தச் சட்டகத்திற்குள்ளேயே இருத்தி அரசியல் ஆதாயத்தையும் அதிகாரத்தையும் பெருவதற்கான குழு மனப்பான்மை கொண்ட போன்மை மனிதர்கள் மண்னைக்கூறிட்டுச் சந்தைப்படுத்தி வரும் இன்றைய சூழலில் ஆதவன் தீட்சன்யாவின் "மீசை என்பது வெறும் மயிர்" என்ற புனைவு சமூகத்தைப் புரட்டிப்போட வேண்டிய பணியை கலகம் தாங்கி முன்வைக்கிறது.


மூன்று தளங்களில் இயக்கம்கொள்ளும் இப்புனைவெழுத்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தைக் கொடுத்து அதிலிருந்து மீளமுடியா வண்ணம் கட்டிப் போட்டுவிடுகிறது. 'நந்தஜோதி பீம்தாஸ்' என்ற நாயகப் பாத்திரம், நாடு திரும்பா எழுத்தாளனாகப் படைப்பாளனால் ஈஜின் நிலவரை நூலகத்தின் வழி இனங்காணப்பட்டு அவரை அறிந்துகொண்டு உரையாட வேண்டும் என்ற இயல்புந்தலால் அவரைக் கார்ட்டர் என்ற கார் ஓட்டுனரின் உதவியால்  சந்திக்கத் தீவிற்குச் செல்லும் பயண அனுபவங்களும் கார்ட்டர் மற்றும் ரவியுடனான அப்பொழுதைய உரையாடல் தருணங்களும் பீம்தாஸ் என்ற அப்பாத்திரத்தின் மீதான அடையாளப்படுத்தல்களும் சந்திக்கச் செல்லும் பயண அனுபவங்களும் முதல்பகுதியான 'சந்திப்பு' எனும் பகுதியில் உயிரோட்டத்துடன் புனைவாக விரிகிறது. அத்தருணங்களில் வாசக மனங்களும் அவர்களோடு இணைந்து பயணிப்பதான நம்பகத்தன்மையான உணர்வை ஆதவனின் எழுத்துகள் உண்டாக்கி விடுகின்றன. பீம்தாஸ் என்ற எழுத்தாளனிடம் எடுக்கப்பட்ட இரண்டு பேட்டிகள் புனைவின் இரண்டாவது பகுதி. பீம்தாஸ் என்ற புனைவுப்பாத்திரத்தின் மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவலின் சுருக்க மொழிபெயர்ப்பாக மூன்றாவது பகுதி அமைந்துள்ளது. இந்த இரு பகுதிகளும் இந்திய - தமிழகச் சமூகங்களின் சாதிய அடுக்கதிகாரத் தன்மையின் ஆதிக்கமுறைமையையும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளால் இலங்கைக்குக் கப்பல்கள்வழியே ஒடுக்கப்பட்ட மக்கள் தோட்ட வேலைக்குக் கொண்டு செல்லப்பட்டதனையும் அதன் பின்னரசியலையும் அப்படிச் சென்ற தமிழர்கள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு தேசிய நிறுவனமயப்பட்ட அரசுகளாலும் தொடர்ந்து நுகரப்பட்டு சுரண்டப்பட்டதனையும் தோலுரித்துக்காட்டுகின்றன. 


புனைவின் கதைசொல்லல் முறையில் படைப்பாளன் உண்டாக்கிய அமைப்பு முறை  தமிழ் இலக்கிய வாசிப்பனுபவத்தில் புதிய வெளியை வாசகனுக்கு இரசனை குன்றாது கொடுத்து  நகர்கிறது.  நந்தஜோதி பீம்தாஸ் என்ற நாடு திருப்பா எழுத்தாளன் ஒருவன் உள்ளான் என்ற நம்பிக்கையை வாசகர் மத்தியில் ஏற்படுத்தியதும் அவருடன் உரையாடியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்தமையுமே பிரதியின் வெற்றி எனலாம். பிரதியை வாசித்து முடித்த எந்தவொரு வாசகருக்கும் பீம்தாஸ் மானசீகமாக நண்பராகவோ உறவினராகவோ நிச்சயம் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. பிரதி ஒட்டுமொத்தமாக , இதுவரைக்குமான புனைவு என்பதற்கான வரையறையைக் கலைத்துப் போட்டுள்ளது.

2 comments:

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...