Sunday, September 23, 2018

அடித்தள மக்களின் வரலாற்றை எழுதும் பின்னைக் காலனிய நாவல்


அடித்தள மக்களின் வரலாற்றை எழுதும் பின்னைக் காலனிய நாவல் 





நாடுபிடிக் கொள்கையோடு மன்னராட்சி காலத்தில் நடந்தேறிய அந்நியப் படையெடுப்புகளால் நிலைபெற்ற அரசாட்சி, ஆரியம், முகலாயம், ஐரோப்பியம் எனப் பல படிநிலைகளிலான புவியியல், கலாச்சாரக்காலனிய ஆட்சிகளின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குண்டு தொடர்ந்து நசுக்கப்பட்டு சின்னாபின்னமாகிப்போன இந்திய, தமிழக மக்களின்  மனவெளியை ஆக்கிரமித்துள்ள காலனியாதிக்க ஏகாதிபத்தியப் பண்பாடுகளை அதன் கற்பித வரலாறுகளை  இனங்கண்டு தோலுரிக்கும் பணியை விளிம்பு நிலை இலக்கியங்கள் இன்றைக்குச் செய்து வருகின்றன. அத்தகைய காலனிய நீக்க விடுதலை இலக்கியங்கள் பின்காலனிய இலக்கியங்களாக வாசிக்கப்படும் சூழலில்  2014 ஆம் ஆண்டில் மணிமேகலைப் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட "சின்னானும் ஒரு குருக்கள்தான்!" என்ற ஆ. சிவராஜ் -இன் நாவல் பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய பிரதியாக இருக்கிறது. 

சாதி ஆணவக்கொலைகளை ஓயாது ஆவணப்படுத்த வேண்டிய பெரும்பணியைக் காயடிப்பு அச்சம் சார்ந்த தொடர் பதற்றத்தில் இருக்கும் இச்சமூகம் வழங்கிக் கொண்டிருக்கிற இன்றைய சூழலில் இந்த நாவல் நிகழ்த்திக்காட்டும் சாதியத் தகர்ப்புப் புனைவுவெளி அசாதாரணமானது.

நாவல் சாதிய அதிகாரம் இயக்கம்பெறும் எதார்த்தத்தை உள்ளது உள்ளபடி பேசியும் அதற்கெதிரான கலகக் குரல்களை தீவிரத்தன்மையோடு முன்னிறுத்தியும் தலித் விடுதலையைப் பிரதிவழி சாத்தியப்படுத்தியும் நகர்ந்து  பின்காலனிய எழுத்து வகைமைக்குள் தன்னை இருத்திக் கொள்கிறது. கதை சொல்லியின் மொழி  இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் கலந்து கட்டி இயக்கம் பெறுகிறது. இது பாத்திரங்களின் உரையாடலையும் கதை சொல்லியின் சொல்லல் முறையையும் வேறுபடுத்திக் காண்பதில் மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரின் வழியான சாதிமறுப்புத் திருமணங்கள்தான் சரியான தீர்வு என்பதைப் பிரதி வழிமொழிகிறது. அத்தகைய புறமண முறைச் சாத்தியப்படுத்தும் சாதியத்தகர்ப்புக் காதல்கள் கிராமங்களில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை உண்மை நிகழ்வின் பின்னணியில் புனைவாக்கம் செய்கிறது.

வலசு கிராம தலித் மக்களின் (மாதாரிகளின்) வாழ்வியலை ஆவணப்படுத்தும் இக்கதை பெருமாள் முருகனின் கூளமாதிரி நாவலைச் சில இடங்களில் நினைவுபடுத்தினாலும் அந்நிகழ்வுகள் பெருமாள் முருகன் என்ற படைப்பாளனின் பார்வைபோல் அல்லாமல் தலித்தின் பார்வையில் எதிர்க் கதையாடலாக  முன்வைக்கப்பட்டுள்ளது. நாவலில் தொழிற்பட்டுள்ள விளிம்பின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அருந்ததியர் சாதியைச் சார்ந்த மக்களின் பண்பாடுகளை, சடங்குகளைப் படைப்பாளி காட்சிப்படுத்தும் பாங்கு இந்நாவலை முழுமையான இனவரைவியல் நாவலாக வாசிப்பதற்கான அகன்ற திறப்பைக் கொடுப்பதாக இருக்கிறது.

கதை நாயகனான சின்னான் இந்தியச் சமூகத்தில் உயர் சாதியாகக் கருதிக்கொள்ளும் பார்ப்பனச் சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதாகவும் பின்பு அவனே குறிப்பிட்ட அக்கோவிலுக்குக் குருக்களாக மாற்றம்கொள்வதும் படைப்பாளனின் சமஸ்கிருதவயப்பட்ட போன்மை மனவெளியை உணர்த்துவதான வாசிப்புக்கு வழிகொடுக்கிறது. அதாவது, தலித்தைப் பிராமணனாக்கி பிராமணக் கருத்தியலை இருத்தி வைக்கிறது. அதாவது இதில் ஒரு வகையான ஏற்பு மனநிலை இருக்கிறது.. இது அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும்.

ஆதிக்கச் சாதியினரின் வீடுகளில்  வளர்க்கப்படும் மாமன்களுக்கான மணமகள்கள் இன்றைய பின்காலனியச் சூழலில்  தன்னிலை உணர்ந்தவர்களாக,  காதலின்றி மூடுண்டு கிடந்த அறைவேக்காட்டுப் பானைகளை உடைத்தெறிந்து தனக்கான இணையைக் காதலெனும் அன்பாயுதத்தால் தேர்ந்தெடுத்து  புறமண முறைகளால் சாத்தியப்படுத்தி வருகின்றனர். அப்படிக் கிளர்தெழுந்த ஒருத்தியாக அடையாளப்படும் கதையின் தலைவி சாதிய அடுக்கில் உயர் இடமாகக் கருதப்படும் இடத்தில் இருந்தாலும் பெருளாதார பலமற்று விளிம்பில் இருத்தப்பட்டவளாகத்தான் இருக்கிறாள். இது ஒரு வகையில் சமூகப் பார்வையின் பின்புலத்தில் இரு குறையுடல்களை இணைக்கும் பணியைத்தான் செய்வதாக இருக்கிறது.

மொத்தத்தில் இப்பிரதி, இன்றைய பின்னைக் காலனிய சூழலில் அடித்தள மக்களின் வரலாற்றை எழுத முனையும் போக்கில் போதாமை மலிந்து கிடப்பதைத்தான் உணர்த்துவதாக இருக்கிறது.

ஜோ.செ. கார்த்திகேயன்

No comments:

Post a Comment

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...