Sunday, September 23, 2018

அடித்தள மக்களின் வரலாற்றை எழுதும் பின்னைக் காலனிய நாவல்


அடித்தள மக்களின் வரலாற்றை எழுதும் பின்னைக் காலனிய நாவல் 





நாடுபிடிக் கொள்கையோடு மன்னராட்சி காலத்தில் நடந்தேறிய அந்நியப் படையெடுப்புகளால் நிலைபெற்ற அரசாட்சி, ஆரியம், முகலாயம், ஐரோப்பியம் எனப் பல படிநிலைகளிலான புவியியல், கலாச்சாரக்காலனிய ஆட்சிகளின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குண்டு தொடர்ந்து நசுக்கப்பட்டு சின்னாபின்னமாகிப்போன இந்திய, தமிழக மக்களின்  மனவெளியை ஆக்கிரமித்துள்ள காலனியாதிக்க ஏகாதிபத்தியப் பண்பாடுகளை அதன் கற்பித வரலாறுகளை  இனங்கண்டு தோலுரிக்கும் பணியை விளிம்பு நிலை இலக்கியங்கள் இன்றைக்குச் செய்து வருகின்றன. அத்தகைய காலனிய நீக்க விடுதலை இலக்கியங்கள் பின்காலனிய இலக்கியங்களாக வாசிக்கப்படும் சூழலில்  2014 ஆம் ஆண்டில் மணிமேகலைப் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட "சின்னானும் ஒரு குருக்கள்தான்!" என்ற ஆ. சிவராஜ் -இன் நாவல் பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய பிரதியாக இருக்கிறது. 

சாதி ஆணவக்கொலைகளை ஓயாது ஆவணப்படுத்த வேண்டிய பெரும்பணியைக் காயடிப்பு அச்சம் சார்ந்த தொடர் பதற்றத்தில் இருக்கும் இச்சமூகம் வழங்கிக் கொண்டிருக்கிற இன்றைய சூழலில் இந்த நாவல் நிகழ்த்திக்காட்டும் சாதியத் தகர்ப்புப் புனைவுவெளி அசாதாரணமானது.

நாவல் சாதிய அதிகாரம் இயக்கம்பெறும் எதார்த்தத்தை உள்ளது உள்ளபடி பேசியும் அதற்கெதிரான கலகக் குரல்களை தீவிரத்தன்மையோடு முன்னிறுத்தியும் தலித் விடுதலையைப் பிரதிவழி சாத்தியப்படுத்தியும் நகர்ந்து  பின்காலனிய எழுத்து வகைமைக்குள் தன்னை இருத்திக் கொள்கிறது. கதை சொல்லியின் மொழி  இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் கலந்து கட்டி இயக்கம் பெறுகிறது. இது பாத்திரங்களின் உரையாடலையும் கதை சொல்லியின் சொல்லல் முறையையும் வேறுபடுத்திக் காண்பதில் மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரின் வழியான சாதிமறுப்புத் திருமணங்கள்தான் சரியான தீர்வு என்பதைப் பிரதி வழிமொழிகிறது. அத்தகைய புறமண முறைச் சாத்தியப்படுத்தும் சாதியத்தகர்ப்புக் காதல்கள் கிராமங்களில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை உண்மை நிகழ்வின் பின்னணியில் புனைவாக்கம் செய்கிறது.

வலசு கிராம தலித் மக்களின் (மாதாரிகளின்) வாழ்வியலை ஆவணப்படுத்தும் இக்கதை பெருமாள் முருகனின் கூளமாதிரி நாவலைச் சில இடங்களில் நினைவுபடுத்தினாலும் அந்நிகழ்வுகள் பெருமாள் முருகன் என்ற படைப்பாளனின் பார்வைபோல் அல்லாமல் தலித்தின் பார்வையில் எதிர்க் கதையாடலாக  முன்வைக்கப்பட்டுள்ளது. நாவலில் தொழிற்பட்டுள்ள விளிம்பின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அருந்ததியர் சாதியைச் சார்ந்த மக்களின் பண்பாடுகளை, சடங்குகளைப் படைப்பாளி காட்சிப்படுத்தும் பாங்கு இந்நாவலை முழுமையான இனவரைவியல் நாவலாக வாசிப்பதற்கான அகன்ற திறப்பைக் கொடுப்பதாக இருக்கிறது.

கதை நாயகனான சின்னான் இந்தியச் சமூகத்தில் உயர் சாதியாகக் கருதிக்கொள்ளும் பார்ப்பனச் சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதாகவும் பின்பு அவனே குறிப்பிட்ட அக்கோவிலுக்குக் குருக்களாக மாற்றம்கொள்வதும் படைப்பாளனின் சமஸ்கிருதவயப்பட்ட போன்மை மனவெளியை உணர்த்துவதான வாசிப்புக்கு வழிகொடுக்கிறது. அதாவது, தலித்தைப் பிராமணனாக்கி பிராமணக் கருத்தியலை இருத்தி வைக்கிறது. அதாவது இதில் ஒரு வகையான ஏற்பு மனநிலை இருக்கிறது.. இது அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும்.

ஆதிக்கச் சாதியினரின் வீடுகளில்  வளர்க்கப்படும் மாமன்களுக்கான மணமகள்கள் இன்றைய பின்காலனியச் சூழலில்  தன்னிலை உணர்ந்தவர்களாக,  காதலின்றி மூடுண்டு கிடந்த அறைவேக்காட்டுப் பானைகளை உடைத்தெறிந்து தனக்கான இணையைக் காதலெனும் அன்பாயுதத்தால் தேர்ந்தெடுத்து  புறமண முறைகளால் சாத்தியப்படுத்தி வருகின்றனர். அப்படிக் கிளர்தெழுந்த ஒருத்தியாக அடையாளப்படும் கதையின் தலைவி சாதிய அடுக்கில் உயர் இடமாகக் கருதப்படும் இடத்தில் இருந்தாலும் பெருளாதார பலமற்று விளிம்பில் இருத்தப்பட்டவளாகத்தான் இருக்கிறாள். இது ஒரு வகையில் சமூகப் பார்வையின் பின்புலத்தில் இரு குறையுடல்களை இணைக்கும் பணியைத்தான் செய்வதாக இருக்கிறது.

மொத்தத்தில் இப்பிரதி, இன்றைய பின்னைக் காலனிய சூழலில் அடித்தள மக்களின் வரலாற்றை எழுத முனையும் போக்கில் போதாமை மலிந்து கிடப்பதைத்தான் உணர்த்துவதாக இருக்கிறது.

ஜோ.செ. கார்த்திகேயன்

Saturday, September 22, 2018

செய்தி சேகரிப்பர்களின் இலக்கியாண்மை

செய்தி சேகரிப்பர்களின் இலக்கியாண்மை

இன்றைக்குச் சமூக மாந்தரினக் கண்களை ஈர்த்து தன்வசப்படுத்தி உள்ள கைப்பேசி உலகத்தை சுருக்கி விருந்தாக்கி கொடுத்துக்கொண்டு உள்ள சூழலில் ஒரு நிகழ்வு அல்லது ஒரு செய்தி உடனே சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்கிறது. அதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இது தவிர ஒவ்வொரு வீட்டின் இடத்தையும் ஆக்கிரமித்துள்ள தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களாலும் செய்திகள் உடனுக்குடன் வந்து சேர்கிறது. அதிலும் இன்றைக்கு செய்தி அலைவரிசைகளின் காலம் என்று சொல்லுமளவிற்கு செய்தி அலைவரிசைகளின் பெருக்கம் அதிகரித்து விட்டது. இவையெல்லாம் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் போட்டி போட்டுக்கொண்டு மக்களின் உணர்வுகளையும் வேட்கைகளையும் தூண்டி விட்டு செய்திகளை ஒரு வணிக பண்டங்களாக மாற்றிவிட்டுள்ளது.

இத்தகைய செய்தி ஊடகக் காலகட்டத்திலும் நாளிதழ்களின் செல்வாக்கு என்பது குறைந்து போனதாக இல்லை. அதாவது இன்றைக்கும் தினசரிகள் சமூகத்தை வாசிப்பதற்கான ஒரு திறவுகோலாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கான காரணம் காட்சி ஊடகங்களும் ஒலி ஊடகங்களும் முன் வைக்கும் செய்திகளின் நீதான மக்களின் நிலை நம்பிக்கையின்மை எனலாம். அதற்காக தினசரிகளில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை தன்மை நிரம்பியவை என்று பொருளல்ல. காட்சி ஊடகங்கள் மக்களின் கவனத்தை முதன்மைப்படுத்தும் வணிக அரசியலை உள்ளீடாகக் கொண்டு இயங்குவதை முதன்மையாக கொண்டுள்ளது என்றால் தினசரிகள் வேறு மாதிரியான அரசியலை உள்ளீடாகக் கொண்டு இயக்கம் கொள்கிறது. இது தினசரிகளில் செய்து சேகரிப்பாளர்களாக இருக்கும் செய்தி சேகரிப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தனிமனித அரசியலையும் சோம்பேறித்தனத்தையும் உள்ளீடாக கொண்டதாக இருப்பதை காண முடிகிறது.

உதாரணமாக, நகர்ப்புறங்களில் மாதந்தோறுமோ வாரந்தோறுமோ நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஒருவர் கொடுக்கும் அவரின் புரிதல் சார்ந்த மதிப்புரையை செய்தியாக, பார்த்தவுடன் கண்ணில் படும்படியான இடத்தில் பதிந்துவிடுகின்றனர். அச்செய்தியின் உண்மை தன்மை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் அச்செய்திகள் அந்நிகழ்வில் நடந்ததற்கும் அந்நிகழ்வில் நடந்ததற்கும் செய்தியாக வந்திருப்பதற்கு சிறிதும் தொடர்பில்லாதபடிக்கு தலைகீழாக்கம் செய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பேசிய பேச்சாளரின் சிறந்த பேச்சு ஏதுமில்லாத குப்பையாக அடையாளப்பட்டிருக்கும். இவர்கள் பெறும் கல்வி நிறுவனப் போர்வையில் நிலைகொண்டிருக்கும் வணிக நிறுவனங்கள் நடத்தும் இலக்கியத் நிகழ்வுகளில் கலந்துகொண்டு செய்தி சேகரிப்பைக் கூட பொருளீட்டுவதற்கான தன்மையில் நிறுத்திக் கொள்கின்றனர் .

பத்திரிகைகளில் வரும் இலக்கியம் சார்ந்த செய்திகளில் இத்தகைய போக்குகள் காணப்பட்டாலும் எல்லா செய்திகளையும் செய்தி சேகரிப்பாளர்களையும் இவ்வகைமைக்குள் இருத்தி மதிப்பிட முடியாது. காரணம், சில செய்தி சேகரிப்பாளர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் தவறாது கலந்து கொண்டு முறையாக செய்திகளை எடுத்துச் சென்றதையும் / செல்வதையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.

ஆக தினசரிகளிலும் காட்சி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் என வரும் செய்திகளை நாம் உண்ணும் தன்மை நிரம்பிய செய்திகளாக எடுத்துக்கொள்ள முடியுமா என்ற எண்ணம் வலுவாக தோன்றுகிறது.

Thursday, September 20, 2018

மலக்குழி மரணங்களை வெளிச்சப்படுத்தும் - சவக்குழி சிறுகதை

மலக்குழி மரணங்களை வெளிச்சப்படுத்தும் - சவக்குழி சிறுகதை






2018 ஜனவரி மாதப் புத்தாண்டுச் சிறப்பிதழாக வெளிவந்துள்ள காலச்சுவடு இதழில் பிரசுரமாகியுள்ள "சவக்குழி" என்ற வீரபாண்டியன் கணேசனின் சிறுகதை, சாக்கடைக் கால்வாய்களைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களில் ஒரு பிரிவினராகிய அருந்ததியச் சாதியைச் சார்ந்த மக்களின் பாடுகளை, அவலங்களை  விவரிப்பதாக வெளிவந்திருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு தடைவிதித்து அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள இந்திய ஒன்றியத்தில் போதிய பாதுகாப்புச் சாதனங்கள்கூட இல்லாமல் குழிகளுக்குள் இறங்கி மூச்சடக்கி வேலை செய்யும் ஒடுக்கப்பட்டு ஒரங்கட்டப்பட்ட தலித் தூய்மைத் தொழிலாளி விசவாயு தாக்கி இறப்பதற்கு முன்பும் பின்பும் இயக்கம்பெறும்  நுண்னரசியலை இக்கதை கவனப்படுத்துகிறது.



அரசு ஊழியர்களாக துப்புரவுத் தொழிலாளர்களை ஏற்க மறுக்கும் அரசின் தீட்டுக் கொள்கை அத்தொழிலாளர்களை கான்ரக்டர்களுக்குக்கீழ் தினக் கூலிகளாக வேலை பார்க்கும் உதிரித் தொழிலாளர்களாக உருமாற்றியுள்ள இன்றைய பின்னைக் காலனிய  நடவடிக்கையை வீதிக்கொரு தலித் தலைவர்கள் முளைத்திருந்தாலும் தலித்துகள் ஆதரவற்றவர்களாக நடுவீதிகளில் அநாதைகளாக நிறுத்தப்பட்டுள்ளதன் திரைமறைவு அரசியலை வெளிச்சப்படுத்த முனைகிறது.




சாதிக் காலனியத்தின் நுண் தளங்களோடு ஊடாடும் கூளமாதாரி

சாதிக் காலனியத்தின் நுண் தளங்களோடு ஊடாடும் - கூளமாதாரி

                             



பெருமாள் முருகனின்  "கூளமாதாரி" நாவல் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்று என்ற நிலைபாட்டினை என்னுள் ஏதென்றுணர முடியாதவொரு இலக்கியப்புலம் உண்டாக்கி வைத்திருந்தபடியால் அதற்கான தருணம் நோக்கிய நகர்வில் மைல்கல்லைத் தொட்டு, அதன்மீதே ஏறி அமர்ந்து வாசித்து முடித்திருக்கிறேன். 

மூன்று பாகங்களைக்கொண்ட இந்நாவல் விளிம்புநிலைப் பார்வையை முதன்மைப்படுத்தி நேர்கோட்டுக் கதை சொல்லல் முறையில் இயக்கம் கொள்வதான  உணர்வை தடையின்றி வாசகனுக்குக் கொடுக்கும் தன்மையில் தொய்வின்றி நகர்கிறது.

நிலவுடைமைச் சமூகத்தின் அடிப்படை அலகான கிராமம் என்ற சாதிய நிறுவனத்தில் உயர்சாதிகளாக/இடைச் சாதியினரில் வல்லாதிக்கம் நிரம்பப்பெற்ற பார்ப்பனப் போன்மை மனிதர்களான  கவுண்டர்களுக்கு ஆடு மேய்ப்பதற்காக பெற்றோர்களால் பேரம்பேசி (சும்மா பேருக்கு) அடமானம் வைக்கப்பட்ட சக்கிலியச் சாதிச் (அருந்ததியர்) சிறுவர்களின் மேய்ச்சல் பொழுதுகளையும் அவர்களின்மீது ஏவப்படும் கவுண்டர்களின், கவுண்டச்சிகளின் ஆதிக்க குணங்களையும் அவ்வதிகாரங்களை புறத்தே ஏற்றும் அகத்தே பொருமியும் இயக்கம்பெரும் சிறுவர்களின் உளவியலையும் பேசுகிறது. 

வாசிப்பில் சற்று சுரத்து குறைவுதான் என்ற உணர்வு இயல்பாய் மேலோங்கினாலும் அந்தச் சுரத்தை வரையறுக்க முனையும்போது தடுமாற்றம் ஆட்கொள்கிறது. ஆடு மேய்க்கும் சிறுவர்களின் புழங்குவெளி ஆதிக்க வர்க்கத்தின் வரையறைக்கு உட்பட்டதாய், எப்போது வேண்டுமானாலும் அதிகார இயந்திரத்தில் அரைபடும் வகையில் இயக்கம் பெற்றுள்ளதை நுட்பமாக விவரித்துச் செல்கிறது. இத்தன்மை எலியா கானெட்டியின் பூனைக்கும் எலிக்குமான உறவுமுறை பற்றிய வரையறையை ஒட்டியதாக உள்ளது. ( பார்க்க; அதிகாரத்தின் மூலக்கூறுகள்) அச்சிறுவர்களின் வரையறுக்கப்பட்ட அவ்வெளிக்குள்ளான விளையாட்டுகளில் கவுண்டர் சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் இணையும்போது எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் நுட்பமாகக் கதையாக்கம் பெற்றுள்ளது. 

கூளையனும் வயிறியும் கதையின் இயக்கத்திற்கான இரு துருவங்கள். நொண்டி , நெடும்பன் , செவிடி, செல்வன் (கவுண்டரின் மகன்) போன்றோர் கதையின் பரந்த பின்னலுக்கு அடித்தளம். செல்வனைத் தவிர்த்த மற்ற  ஐந்து பாத்திரங்களும் இணைந்து தங்களுடைய கட்டு வெளிக்கு உட்பட்ட ஆடுகளின் மேய்ச்சல்வெளியை தீர்மாணித்துவிட்டு தங்கள் பொழுதுகளை எப்படிக் கடத்துகின்றனர் என்பது கதை வெளி. அத்தகைய பொழுதுகளில் அச்சிறுவர்களின் உணவுப் போதாமையை இட்டு நிரப்பும் சிறு சிறு திருட்டுகள் ( நிலக்கடலை திருடுதல்), மீன்பிடித்து உண்ணுதல், வெள்ளை எலியை பிடித்து நெருப்பிலிட்டு உண்ணுதல், பாழுங்கிணற்று நீர்க்குளியல் தருணங்கள், விளையாட்டுகள், அவர்களுக்குள் உண்டாகும் முரண்பாடுகள், பாலியல்சார் வேட்கைகள், சண்டைகள், கேலி, கிண்டல்கள் போன்றவை மிக எதார்த்தமாகக் கதையாக்கம் பெற்றுள்ளன. அத்தகைய ஆடுகளுக்கான  கட்டுவெளியில் உடைப்பு ஏற்படும்போது நடந்தேறும் ஆதிக்கவர்க்கத்தின் அதிகார வெறியாட்டம் தாழ்த்தப்பட்ட சிறுவர்களின் உடல்கள்மேல் கீறல்களை வாரி இறைப்பதோடு நின்றுவிடாமல் அவ்வுடல்களை நிரந்தர சேவை உடல்களாக மாற்றும் எண்ணத்தில் வீறுகொண்டு நுகர்வதை பதிவு செய்கிறது.(கூளையனின் கண்கானிப்பிலிருந்த ஆடு திருடப்படும் போதும் நெடும்பனின் கட்டுக்குள்ளிருந்து விலகி சொக்குப்பயிரை உண்டு மூன்று ஆடுகள் இறந்த போதும்) அத்தகைய செயல்பாடுகளுக்கு மத்தியில் உருப்பெரும் சாதிய அதிகாரத்திற்கு எதிரான கலக உணர்வுகள் கலகக் குரல்களாகவும் செயல்பாடுகளாகவும் வெளிப்படாதபடிக்கு புனைவாக்கம் பெற்றுள்ளது. இத்தன்மை ஜாகிர்ராஜாவின் புனைவு வெளியோடு ஒத்த தன்மை கொண்டதாக இருப்பதனை உணர முடிகிறது. படைப்பாளளின் இத்தன்மையிலான கதை சொல்லல் முறைமை படைப்பாளனின் படைப்பாக்க அரசியலை, அதாவது கலகத்தை மனதிற்குள்ளேயே இருத்திக் கொள்ளும்படி புனைந்ததன் ஆதிக்க படைப்புமன அரசியலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதனை கூளையன், நெடும்பன், வவுறி ஆகியோரின் புலம்பல்கள் உணர்த்துகிறது. படைப்பாளியின் இத்தன்மை பின்காலனிய நாடுகளில் தோற்றம்பெற்று தொடர்ந்து இயக்கம்பெறும் இலக்கியங்களை மூன்று கட்டங்களில் வகைப்படுத்தி வாசிப்பை நிகழ்த்தும் (காண்க. ஒடுக்கப்பட்டோர்: விடுதலையின் வடிவங்கள்) ஃபனானின் பார்வை வழியே காணும்போது இரண்டாம் கட்ட இலக்கிய வகைமையில் முடங்கியுள்ளதை தெளிவுபடுத்துவதாக இருக்கிறது. 

நாவலின் இரண்டாவது பகுதி கூளையனுடன் தொண்டுப் பட்டிக் காவலுக்குச் செல்லும் செல்வனுடனான உறவுநிலையையும் அவர்களின் நடத்தைகளையும் அதில் இயல்பாகவே புரையோடிக்கிடக்கும் அதிகார / ஆதிக்க வெளிப்பாட்டையும் சிதிலமாகிப்போகும் அவ்வாதிக்க முகங்களின் வடிவங்களையும் காட்சிகளாக ஓவியந்தீட்டுகிறது. இரு சிறுவர்களின் இரவு நேரப் பட்டிக் காவலில் இயல்பாக உருக்கொள்ளும் செல்வனின் பயம் சார்ந்த காட்சிகளில் கூளையன் திடமானவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் பின்பு பயத்தால் (கடவுள்சார் பயமாக புனை வேடமூட்டப்பட்டு) படுக்கையில் சிறுநீர் கழித்துவிடும் செயல்பாடும் பய உணர்வை நியாயப்படுத்தும் பாங்கோடும் வாசகமனங்களுக்கு நகைச்சுவை ஊட்டும் பாங்கோடும் சமைக்கப்பட்டிருப்பதுபோலத் தோன்றினும் அதனுள் படைப்பாளனின் சாதிய ஆதிக்க மனோபாவம் ஊடாட்டம் கொண்டிருப்பதனை உணர்த்தத் தவறவில்லை. 

சினிமா காண்பதற்காக செல்வன் கூளையனை வற்புறுத்தும் காட்சிகளும் அவனின் ஆழ்மன வேட்கையை உயிர்த்தெழச் செய்யும் உளவியல் சார்ந்த ஆதிக்க வெளிப்படுத்தலும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்க மனநிலையை உணர்த்துவதாய் கதையாக்கம் பெற்றுள்ளமை படைப்பாளியின் எதார்த்தப் பிரதிபலித்தலின் நுட்பம் வெளிப்படுகிறது. கதை இறுதியாக செல்வனின் சொற்களால் காயம் பெற்று கோபத்தின் உச்சம் தொட்ட கூளையன் கிணற்று நீரில் செல்வனை மூழ்கடித்துக் கொன்று விடுவதான முடிவை வாசகன் அனுமானித்துக் கொள்வதற்கான திறப்பைக் கொடுத்து நிறைவு பெறுகிறது. கூளையன் மீது வரையறையின்றி ஆதிக்கச் சாதியினனான கவுண்டரின் அவரது குடும்பத்தாரின் அட்டூழியங்களுக்குச் சிறு எதிர்ப்பும் காட்டாத கூளையன் வவுறியுடன் இனைத்துத் தவறாகப் பேசியதற்காகச் செல்வனை கொல்லுகிறான் என்பது தலித்துகளின் மீதான மிகு புனைவாகப்படுகிறது. 

சுயசாதி பரிசோதனையை பிரதி வழி படைப்பாளன் நிகழ்த்திக் காட்டினாலும் அவற்றிலும் சாதி ஆதிக்கத்தனம் குடிகொண்டிருப்பதை உணரத்தான் செய்கிறது. என்றாலும் இத்தகைய சுயசாதி விமர்சன எழுத்துகள் வரவேற்கத்தக்கதாயும் பாராட்டப்படத்தக்கதாயும் கவனம்பெற வேண்டிய தேவையுண்டு என்பதை தலித்திய விமர்சகர்கள் உணர்வர். ஆனாலும் இத்தகைய படைப்புகள் சாதி அதிகாரத்தைப் புத்தாக்கம் செய்வதான அபாயம் நிறைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.



Wednesday, September 19, 2018

அர்த்தங்களைத் தள்ளிப்போடும் வாசகப் பிரதி - இரா.முருகனின் இசக்கி

அர்த்தங்களைத் தள்ளிப்போடும் வாசகப் பிரதி - இரா.முருகனின் இசக்கி



தீராநதி (பிப்ரவரி 2018) இதழில்  இரா.முருகனின் 'இசக்கி', அ.மலர்மதியின் 'மொய்ப்பணம்!' ஆகிய இரண்டு சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
பொருளாதார வலிமையற்ற உடல்வளம் குன்றிய தந்தை தன் மூன்று மகள்களில், சமூகப் பார்வையில் குறையுடல் கொண்ட முதல் மகளிற்கு மொய்ப்பண வரவை நம்பி, கடன் வாங்கிச் செய்யத் துணிந்த திருமண ஏற்பாட்டில் தொடங்கி அதனால் அத்தந்தை எதிர்கொள்ளும் மன அழுத்தங்களையும் மொய்ப்பண ஏமாற்றம் கொடுத்த மனவலியையும் தந்தையின் பார்வையில் 'மொய்ப்பணம்' கதை  முன்வைக்கிறது.  தந்தையின் நிலையுணர்ந்த மகளின் மன ஓட்டங்களை சமூக இழிவின் தாத்பரியங்களோடு கதை புனைவாக்கம் செய்துள்ளது.

தொழில்நுட்ப உதவியோடு காப்பி கலக்கத் தெரியாமல் அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனியார் துறை ஒன்றில் உள்ள கடையில் வேலைக்குச் சேர்ந்து ஒரே மாதத்தில் அந்தத் தொழில்நுட்பக் கருவிகளைக் கலைத்து சரிசெய்து காப்பி கலக்கும் அளவுக்கு திறன் கொண்டவளாக மாறுகிற இசக்கி என்ற பெண்னின் வாழ்வை மையமாகக் கொண்டது 'இசக்கி' எனும் கதை .  காப்பி  கலக்கும் திறனால் ஏராளமான யானைக் கூட்டங்களும் நீர்நாய்களும் அந்த கட்டிடத்தினைச் சுற்றிப் பறந்தபடி இருக்கிறது. இசக்கியின் வாழ்வை ஊடறுத்துச் செல்லும்
ரோஷ்ணி, கிரண் என்ற இருவரின் பங்களிப்புகளோடு விரியும் கதையில் இசக்கியைச் சுற்றிச் சுற்றி வரும் ஆண் கூட்டத்திற்கு மத்தியில் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ரோஷ்ணி மீது மட்டும் வேட்கை கொண்டு தனது அலுவலகப் பணியைச் செய்துகொண்டிருக்கும் கிரண், கணவனோடு இங்கிலாந்தில் தங்கி கணிப்பொறித் தொழில்நுட்ப வேலை பார்க்கும் ரோஷ்ணி, அவளது கிரண் மீதான காதல் என கதை இச்சமூகம் கூடா ஒழுக்கங்களாக முன்வைக்கும் கருத்தியல்களை மாற்றுக்கோணத்தில்  புனைவாக்குகிறது. ஒரு சமயம், மின்சாரம் தாக்கியதால் கத்திக் கொண்டிருக்கும் இசக்கியை காப்பாற்றும் கிரணுக்கு சினிமாப்பாணி காதல் தோன்ற இருவரும் கணவன் மனைவியாக வாழ்கின்றனர். ரோஷ்ணி கடல் நாரை பறந்து சென்றதை டுவிட்டரில் பதிந்துவிட்டு கிரண் சீட்டில் அமர்ந்து வேலை பார்க்கிறாள்.
இரண்டுமே பெண்ணியத்தை மையப்பொருண்மையாகக்கொண்ட சிறுகதைகளாக வாசிப்பதற்கு இடம் கொடுக்கத்தான் செய்கின்றன.  அதிகம் விவாதிக்கப்பட்ட சமூக இழிவை அதன் புதுப்பரிணாமங்களோடுதான் பேசுகிறது. என்றாலும் இரா. முருகனின் இசக்கி அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய கதையாகப்படுகிறது.

கதை எளிமையான நேர்கோட்டுக்கதை சொல்லும் முறைமையில் குறியீட்டுத் தன்மையோடு மொழியாடப்பட்டுள்ளது. இசக்கி , ரோஷ்ணி, கிரண் என்ற மூவரின் கதை. நமக்குப் பிடித்தமான / பழகிப்போன முக்கோணக் காதல் கதை என்று கூட வாசித்துக் கொள்ளலாம். அல்லது எல்லா காலங்களிலும் பெண் என்ற உயிரி ஆல்ஹகால் நிரம்பிய சதைக்குப்பியாக ஆணுக்கு இன்றும் போதைக்கான பாணமாக இருப்பதனைத்தானே பேசுகிறது என்று மிகச் சாதாரணமாகக்கூட கடந்து செல்லலாம். அல்லது காப்பி விற்பவளாக இருந்தாலும்சரி கம்யூட்டர் வேலை பார்ப்பவளாக இருந்தாலும்சரி கிரண்களுக்கு கிளுகிளுப்பூட்டக் கூடியவர்கள்தான் என்ற எண்ணத்தை காட்டிக் கொள்ளாமல் நகர்ந்துவிடலாம்.
வாய்மொழிக் கதையாடலில் இடம்பெறும் இசக்கியின் (இசக்கியம்மன் கதை) புனிதம் இந்த நவீன யுகத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு அதன் புனிதத் தன்மை காக்கப்படுவதாகவும் அல்லது உள்ளார்ந்துள்ள குற்றவுணர்ச்சிக்கான வடிகால் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதாகவும்  வாசிக்கலாம். (அது அந்த படைப்பாளனின் நனவிலி இருப்பைப் பொருத்து.) நரண் என்ற ஆண் உடல் சமூகக் கற்பிதங்களின்படி தூய்மையுடலுடன்தான் இணைய வேண்டும் என்ற ஆணாதிக்க மனத்தின் வெளிச்சப்பாடாகவும் வாசிக்கலாம்.

அதுவாசகப் பிரதிதானே என்பதை மட்டும் வழக்கமான முணுமுணுப்பாக இல்லாமல் பிறர் செவிமடுக்கச் சொல்லிச் செல்லிவிடுவது உசிதம். ஏனெனில், (ஒருவேளை ) மொய்ப்பணம் நம்முடைய சட்டைப் பைகளையாவது நிரப்பக்கூடும்.




ஜோ.செ.கார்த்திகேயன்

சமூகக் கூட்டு நனவிலியின் அதிகாரத்தைக் கலைத்துப் போடும் க. வீரபாண்டியனின் தீராக்கடன் சிறுகதை.

சமூகக் கூட்டு நனவிலியின் அதிகாரத்தைக் கலைத்துப் போடும் க. வீரபாண்டியனின் தீராக்கடன் சிறுகதை.





ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான நிலவுடைமைச் சமூகச் சாதிக் காலனியாதிக்க வடிவங்களை முதன்மைப்படுத்தும் முதல் தலைமுறை தலித் இலக்கியப் போக்கினைத் தொடர்ந்து முதலாளிய, உலகமய, நகர்மயச் சூழலில் துப்புரவுப் பணியாளர்களாகவும் கடைநிலை ஊழியர்களாகவும் தினக்கூலிகளாகவும்  ஓரங்கட்டப்பட்டு, சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறை வடிவங்களை இரண்டாம், மூன்றாம் தலைமுறை தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் தனக்கான பேசுபொருளாக்கி வருகின்றன. அவ்வகையில், தீராக்கடன் என்ற சிறுகதை, ராமன் - சின்னு என்ற இரு தலித் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை முன்வைத்து அதிகார வடிவங்களை அடையாளப்படுத்துகிறது. தீராக் கடனாக தலைமுறை தலைமுறையாக அம்மக்களின் உழைப்பைச் சுரண்டி வரும் கந்து வட்டியின் கொடூர முகத்தை வெளிச்சப்படுத்துவது கதையின் மையச் சரடு. 

அடித்தட்டு மக்களின் ஆழ்மனதில் அடிமைப் புத்தியைக் கட்டமைக்கும் செயற்தளங்களில் பொருளாதாரமும் முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சமூகத்தைப் பொருத்தமட்டில் சாதியப் படிநிலை அமைப்பு அப்பொருளாதார வளத்தை விளிம்பின் விளிம்புநிலை மக்கள் பெற்றுவிடாமல் பாதுகாத்து அடிமையுடல்களைச் சேவையுடல்களாக சாதி அடையாளத்துள் புதைத்து சுரண்டிவருகிறது. ஐரோப்பியக் காலனியாதிக்கம் இந்த சாதியப்பின்னலுக்கு நவீனமுகம் கொடுத்து தலித் பொருளாதார வளர்ச்சியில் முட்டுக்கட்டை போட்டது. ஐரோப்பியக் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய விளிம்புநிலை மக்களின் முதலாளி - தொழிலாளி வர்க்க பொருளாதார வரவுகள் நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் நுழைய முற்பட்டு வட்டிக்கு வட்டி கட்டும் கந்துவட்டிக் கலாச்சாரப் போக்கால் மனச்சிதைவுக்கு ஆளாக்கி வருகிறது.
சுய வதைப்புப் போராட்டங்களும்  சுய அழிப்புப் செயல்பாடுகளும் தினசரிகளின் பக்கங்களை நிரப்பியும் காட்சி ஊடகப் பசிக்கு தீனியிட்டும் வருகின்ற இன்றைய சூழலில்  க. வீரபாண்டியனின் 'தீராக்கடன் ' என்ற சிறுகதை சமூகக் கூட்டு நனவிலி மனதின் ஆதிக்கத்தை வெளிச்சப்படுத்துவதாக இருக்கிறது


சின்னுவின் மீதான கந்து வட்டிக்காரன் வழிவிட்டானின் உடல், உளவியல் சார்ந்த ஒடுக்குமுறைக்கு  எதிராகப் பீறிட்டுக் கிளம்பும் கலகக் குரலும் ராமனின் அகநிலைக்குரலும் விளிம்புநிலை அரசியலின் முதன்மைச் செயல்பாடுகள். 
சின்னுவின் கலகக் குரல், தலித்துகளின் மீதான அதிகார வர்க்கத்தின் பொதுபுத்திகளை உடைத்தெறிகிறது. 

ராமன் போன்ற காதாபாத்திரங்கள் ஆண்களின் வெளி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதாகவும் உள்ளூர அதிகாரத்தை எதிர்க்கும் தறுவாயை எதிர்நோக்கியுள்ளதாகவும் புனையப்பட்டுள்ளது.
இறுதியில், படைப்பாளியால் கந்து வட்டிக்காரனுக்குக் கொடுக்கப்படும் தண்டனையும் ராமனின் அகமகிழ்ச்சியும் ஆதிக்கம் அழிந்து போவதால் மற்றமைகளின் மனதில் உருக்கொள்ளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 



ஜோ.செ. கார்த்திகேயன்.
ப. சின்னச்சாமி

ஜெயமோகனின் 'நூறு நாற்காளிகள் " - விளிம்பின் மொழி மீதான அத்துமீறல்

ஜெயமோகனின் 'நூறு நாற்காளிகள் " - விளிம்பின் மொழி மீதான அத்துமீறல்



இன்றைய பின்காலனியச் சூழலில் காலனிய அதிகாரங்களுக்கு எதிரான விளிம்புநிலைச் சொல்லாடல்கள் முதன்மை பெற்று வருகின்றன. குறிப்பாகக் காலனியாதிக்கவாதிகளால் மொழியப்பட்ட காலனியப்படுத்தப்பட்ட மக்களின் மீதான கருத்தியல் கட்டமைப்புகள் இன்றைக்கு காலனியப்படுத்தப்பட்ட மக்களால் மாற்றி எழுதப்படுகின்றன. அதாவது காலனியப்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்கள் தங்களைத் தாங்களே எழுத முனைந்துள்ளனர். (அதற்கான சாத்தியத்தை பின்னைக் காலனியம் உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.)
அவ்வகையில், ஆரியக் கலாச்சாரக் காலனியர்களாலும் அவர்தம் உருவாக்கிய போன்மை மனிதர்களாலும் முன்வைக்கப்படும் விளிம்பு நிலை குறித்த கருத்தாக்கங்கள் இன்றைக்கு மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியது அவசியம் எனலாம். ஏனெனில் அப்போதுதான் காலனிய நீக்கத்திற்கான வழிமுறைகளைச் சமூகத்தளத்தில் உருவாக்க முடியும்.

அவ்வகையில், விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை முன்வைத்து புனையப்பட்ட ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் என்ற பிரதியும் கவனங்கொள்ளத்தக்க பிரதிகளில் ஒன்று. ஏனெனில் இப் பிரதி வெகுமக்களை அதிகம் ஈர்த்த, தொடர்ந்து அடுத்தடுத்து பதிப்பிக்கப்பட்ட பிரதி. அதற்குப் படைப்பாளனின் மொழி ஆளுமை முதன்மையான காரணங்களில் ஒன்று.
ஜெயமோகனின் கதை சொல்லும் மொழியானது பிரதியின் உள் அரசியல் தளங்களை வாசகன் எளிதில் இனங்காண முடியாத அளவுக்கு வாசகனின் மனதை ஈர்த்துக் கொள்ளும் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த தனித்தன்மை நூறு நாற்காலிகள் பிரதிக்கும் பொருந்தும்.
தனித்துவமான ஒரு பிரதியாக வாசிக்காமல், சிவகாமியின் உண்மைக்கு முன்னும் பின்னும் என்னும் நாவலுடனும் க. பஞ்சாங்கத்தின் ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் என்ற நாவல் உடனும் இணைத்து வாசிக்கும் போதுதான் அந்தப் பிரதி முன்வைக்கும் அரசியல் தன்மையை முழுமையாக உணரமுடியும் என்று கருதுகிறேன். ஏனெனில் அப்போதுதான் அந்த நாவல் (நூறுநாற்காளிகள்)  ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எவ்வளவு கேவலமாகச் சித்திரித்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்
தமிழ் சமூகத்தில் ஒரு பழமொழியுண்டு. "நாயக் கொண்டு போய் நடுவூட்ல வச்சாலும் அதுக்கு நக்கித் திங்கற புத்தி போகாது"  என்பர்.  ஜெயமோகன் அந்தப் படைப்பின் வழியாக இந்த பழமொழியை தான் நுட்பமாக  கூறுகிறார். தாழ்த்தப்பட்ட இந்த சமூகம் மேன்மை பெறுவதற்கு இன்னும் நூறு நாற்காலிகள் தேவைப்படுகிறது என்கிறார்.
படைப்பாளனின் மொழி பாதிக்கப்பட்டவனின் மொழியாக வெளிப்படாமல் , குறைந்தபட்சம் அந்த பாதிப்பின் வீரியத்தைப் உணர்ந்ததாக வெளிப்படாமல்  அதிகாரத்தின் மேடையில் அமர்ந்து கொண்டு கொண்டு வலியின் வேதனையில் கதறும் அவன் மீது பரிதாபம் கொள்ளும் தன்மையில் வெளிப்பட்டுள்ளது.
இன்னும் விரிவாகப் பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் அந்தப் பிரதிகளின் மீது உண்டு. அடித்தள மக்கள் ஆய்வு சார்ந்து நோக்கும்போது ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் என்ற பிரதியின் போதாமையை மிக நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியும் என கருதுகிறேன்

Tuesday, September 18, 2018

குழு அரசியலும் தனிமனிதப் புறக்கணிப்பும்


18 ஜூலை 2018
குழு அரசியலும் தனிமனிதப் புறக்கணிப்பும்




மனித அறிவு வளர்ச்சிப் பாதைக்கு பயணங்கள் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பைச் செலுத்துபவையாக இன்றளவும் இருக்கின்றன. அதனால்தான் பயண அனுபவங்கள்  புத்தகங்களாகவும் அறிவு வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட அங்கமாகவும் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக தொடர்வண்டிப் பயணங்கள் அபரிமிதமானதொரு அறிவுத்தோற்றவியலை உண்டாக்க வல்லது. தொடர்வண்டிப் பயணங்கள் பல தருணங்களில் மனதின் வலியைக் கூட்டி விடுகின்ற தன்மையைக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு வலிமிகுந்த தருணத்தை இன்றைய தொடர்வண்டி பயணமும் கொடுத்தது.

அரக்கப் பரக்க ஓடி வந்து தொடர் வண்டியில் ஏறி ஜன்னல் ஓரமாக ஒரு இருக்கையை பிடித்து, அமர்ந்து, நம் வேகத்துக்கு ஈடுகொடுக்க அரும்பாடுபட்ட நுரையீரலை சாந்தப்படுத்துவதற்காக அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து,  சற்று நிதானித்து,கண்களைச் சுழல விடுவோம்.
இயல்புதான்.  அந்த கணம...

ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிழிந்த அழுக்கு தோய்ந்த தன்னுடைய அங்கிகளோடு அந்தத் தொடர்வண்டிப் பெட்டிக்குள் நுழைகிறார். மடமடவென தன்னுடைய சட்டையை கழற்றி தொடர்வண்டிப் பெட்டியின் பிளாட்பாரத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறார். சக பயணிகள் அவருக்கு ஒரு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரையென தங்களால் இயன்றதைக் கொடுத்தனர்.
இயல்பாகவே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதற்காக திரும்பினேன். அங்கு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க அம்மையார் ரயில் நிலையத்தில் அந்த தொடர்வண்டி இடையில் குவிந்து கிடந்த மனித மலத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்தார்.  இன்னொரு பெண்மணியும் குப்பையையும் குப்பைக் கூடையும் குப்பை வைப்பதற்கான ஒரு முரத்தையும் கையில் வைத்துக் கொண்டு  குப்பைகளை தேடிப்பிடித்து, இல்லையில்லை வழித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காட்சி மனதின் வலியை இன்னும் இரட்டிப்பாக்கியது.
இன்றைக்கு நாம் அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கும் விளிம்புநிலை மக்களின் உடைய வாழ்வியலின் ஒரு கூறு இந்த நிகழ்வுகள். இந்த அடிமட்டத் தொழிலாளர்கள் தூய்மைத் தொழில் அல்லது இன்னும் பல பெயர்களில் சொல்லப்படும் சமூகத்தால் இழிவான பணிகளைச் செய்யக்கூடிய பணியாளர்களாக இருக்கின்றனர். இந்தியச் சமூகத்தில் கடைக்கோடி சாதி அடுக்கில் இருக்கக்கூடிய மக்கள் இத்தகைய பணிகளைச் செய்பவர்களாக இருக்கின்றனர் என்பது வெளிப்படை .
இன்றைக்கு அத்தகைய பணிகளில் நிறுத்தப்பட்டுள்ள மக்களுக்கான ஆதரவுக் குரல்களை, இடதுசாரிகளும் சமூகச் சிந்தனையாளர்களும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது இந்த கடைநிலை அடுக்கு இன்றைக்கு அரசியல் தளத்தில் கவனம் பெறுகிறது எனலாம்.
அதாவது, இந்தியச் சமூகம் எங்கும் வியாபித்து இருக்கும் இந்த மனிதர்கள் விளிம்பு நிலை மக்கள் என்ற பெரும் வகைப்பாட்டுக்குள்ளோ அல்லது மனநிலை பிறந்தவர்கள், தலித்துகள், பொருளாதார வலிமை அற்றவர்கள் என்ற  தனித்த குழு அடையாளத்திற்குள்ளோ இருத்திப் பேசப்படுகின்றனர்.
ஆனால் இந்தக் குழு அடையாளத்தைக் கடந்த, இந்த தன்னுடைய சட்டையை கழற்றி தூய்மை செய்யும் இந்த நபர் அத்தகைய கவனத்திற்கு வந்தாரா என்பது சந்தேகமே..  ஏனென்றால் அவர் தனித்து விடப்பட்டவர். அதாவது குழு அடையாள அரசியலுக்குள் இடம் பெற்றவர்கள் மனித சமூகத்திற்குள் புறந்தள்ளப்பட்டவர்கள். ஆனால் இத்தகைய தனிநபர்கள் மனித சமூகத்திலிருந்தே புறந்தள்ளப்பட்டவர்கள். அதனால் தான் இவர்களால் குழு அரசியலுக்குள் நுழைய முடியவில்லை. அதாவது இவர்கள் இன்னும் குழுவாக சேரவில்லை. ஆக, இந்த அடித்தட்டு விளிம்புநிலை மக்கள் அல்லாமல் அவர்களாலும் கண்டுகொள்ளப்படாமல்  புறந்தள்ளப்பட்ட  மக்கள் அல்லது மனிதர்கள் இந்த சமூகத்தால் இன்றைக்கும் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்களாக  இருப்பதால் அவர்கள் கவனம் பெறுவதில்லை.  அதாவது விளிம்பின் விளிம்பாலும் புறந்தள்ளப்படும் அல்லது கண்டுகொள்ளப்படாத இத்தகைய மனிதர்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கு இன்றைய உலகமயச் சூழல் முழுமையான காரணமாக இருக்கிறதை நாம் அவதானிக்க முடியும்.

இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அவர் யார் என்ன என்ற வினாக்களை எழுப்பி அவரை தேட முனையும் போது அவர் சாதிய கட்டுமானத்தை ஏதாவது ஒரு அடுக்கில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாம் அறிந்தவை. அடையாளங்களை கடந்த   ஒரு தனிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அல்லது, தன்னை தள்ளிக்கொண்டு வந்த அந்த மனிதன் இன்றைக்கு விலை அரசியலுக்குள் குரல் கொடுக்க முடியாத நபராக, விளிம்புநிலை அரசியல் தளத்தில் அவருக்காக குரல் கொடுக்கும் மனிதர் இல்லாத களத்தில் அவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.


_ ஜோ.செ. கார்த்திகேயன்

மீசை என்பது வெறும் மயிர்


மீசை என்பது வெறும் மயிர்



சாதி, சமயம் கடந்து மனித சமத்துவத்திற்காகப் போராடிய ஆளுமைகளை (பெரியார், அம்பேத்கர் போன்றோரை) அந்தச் சட்டகத்திற்குள்ளேயே இருத்தி அரசியல் ஆதாயத்தையும் அதிகாரத்தையும் பெருவதற்கான குழு மனப்பான்மை கொண்ட போன்மை மனிதர்கள் மண்னைக்கூறிட்டுச் சந்தைப்படுத்தி வரும் இன்றைய சூழலில் ஆதவன் தீட்சன்யாவின் "மீசை என்பது வெறும் மயிர்" என்ற புனைவு சமூகத்தைப் புரட்டிப்போட வேண்டிய பணியை கலகம் தாங்கி முன்வைக்கிறது.


மூன்று தளங்களில் இயக்கம்கொள்ளும் இப்புனைவெழுத்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தைக் கொடுத்து அதிலிருந்து மீளமுடியா வண்ணம் கட்டிப் போட்டுவிடுகிறது. 'நந்தஜோதி பீம்தாஸ்' என்ற நாயகப் பாத்திரம், நாடு திரும்பா எழுத்தாளனாகப் படைப்பாளனால் ஈஜின் நிலவரை நூலகத்தின் வழி இனங்காணப்பட்டு அவரை அறிந்துகொண்டு உரையாட வேண்டும் என்ற இயல்புந்தலால் அவரைக் கார்ட்டர் என்ற கார் ஓட்டுனரின் உதவியால்  சந்திக்கத் தீவிற்குச் செல்லும் பயண அனுபவங்களும் கார்ட்டர் மற்றும் ரவியுடனான அப்பொழுதைய உரையாடல் தருணங்களும் பீம்தாஸ் என்ற அப்பாத்திரத்தின் மீதான அடையாளப்படுத்தல்களும் சந்திக்கச் செல்லும் பயண அனுபவங்களும் முதல்பகுதியான 'சந்திப்பு' எனும் பகுதியில் உயிரோட்டத்துடன் புனைவாக விரிகிறது. அத்தருணங்களில் வாசக மனங்களும் அவர்களோடு இணைந்து பயணிப்பதான நம்பகத்தன்மையான உணர்வை ஆதவனின் எழுத்துகள் உண்டாக்கி விடுகின்றன. பீம்தாஸ் என்ற எழுத்தாளனிடம் எடுக்கப்பட்ட இரண்டு பேட்டிகள் புனைவின் இரண்டாவது பகுதி. பீம்தாஸ் என்ற புனைவுப்பாத்திரத்தின் மீசை என்பது வெறும் மயிர் என்ற நாவலின் சுருக்க மொழிபெயர்ப்பாக மூன்றாவது பகுதி அமைந்துள்ளது. இந்த இரு பகுதிகளும் இந்திய - தமிழகச் சமூகங்களின் சாதிய அடுக்கதிகாரத் தன்மையின் ஆதிக்கமுறைமையையும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளால் இலங்கைக்குக் கப்பல்கள்வழியே ஒடுக்கப்பட்ட மக்கள் தோட்ட வேலைக்குக் கொண்டு செல்லப்பட்டதனையும் அதன் பின்னரசியலையும் அப்படிச் சென்ற தமிழர்கள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு தேசிய நிறுவனமயப்பட்ட அரசுகளாலும் தொடர்ந்து நுகரப்பட்டு சுரண்டப்பட்டதனையும் தோலுரித்துக்காட்டுகின்றன. 


புனைவின் கதைசொல்லல் முறையில் படைப்பாளன் உண்டாக்கிய அமைப்பு முறை  தமிழ் இலக்கிய வாசிப்பனுபவத்தில் புதிய வெளியை வாசகனுக்கு இரசனை குன்றாது கொடுத்து  நகர்கிறது.  நந்தஜோதி பீம்தாஸ் என்ற நாடு திருப்பா எழுத்தாளன் ஒருவன் உள்ளான் என்ற நம்பிக்கையை வாசகர் மத்தியில் ஏற்படுத்தியதும் அவருடன் உரையாடியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்தமையுமே பிரதியின் வெற்றி எனலாம். பிரதியை வாசித்து முடித்த எந்தவொரு வாசகருக்கும் பீம்தாஸ் மானசீகமாக நண்பராகவோ உறவினராகவோ நிச்சயம் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. பிரதி ஒட்டுமொத்தமாக , இதுவரைக்குமான புனைவு என்பதற்கான வரையறையைக் கலைத்துப் போட்டுள்ளது.

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...