Sunday, September 19, 2021

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

 

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்



கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்கம் செய்துள்ளது. மருத்துவத் துறை சார்ந்தவர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாகப் பார்க்கும் புதியதான ஒரு நோக்கு நிலை உண்டாகியுள்ளது. உண்மையில், இப்பார்வை நம்முடைய இந்தியச் சமூகத்திற்கு ஒன்றும் புதிதில்லை. ஏனெனில், இவ்வகையிலான பார்வை என்பது பசு மாட்டைத் தடவிக்கொடுத்துப் பால் கரக்கும் பார்ப்பனியக் காலனிய மனநிலையின் வெளிப்பாடு. இதைப் புரிந்துகொள்வதற்குப் பெரிய அறிவுஜீவியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முன்களப் பனியாளர்களாக இருக்கக்கூடிய செவிலியர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் என்றெல்லாம் சொல்லி உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர்களை உளவியல் ரீதியாக அதே பணியை இன்னும் சிறப்பாகச் செய்வதற்காகத் தாயார்ப்படுத்துகிறோம்.

கொரானவிற்கு எதிரான செயல்பாட்டுத்தள முன்களப் பணியாளர்களில், செவிலியர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்பதுதான் நிதர்சனம். கொரானாவிற்கு எதிரான போர்க்களத்தில் மருத்துவத்துறைக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு உபகரனங்களும் உத்தரவாதமும் கவசங்களும் அதே அளவு முதன்மையானவர்களாக இருக்கக் கூடிய சுகாதாரத் துறையின் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. வாரத்திற்கு ஒரு மாஸ்க், சில இடங்களில் வாரத்திற்கு 2 மாஸ்க் மட்டுமே தருகின்றனர். இவர்களைப் பொருத்த வரையில் ஒரு மாஸ்க்கை ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. அதேபோல் அவர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரப்படவில்லை. - கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் ! (https://www.vinavu.com/2020/05/04/chennai-corona-frontline-warriors-cleanliness-worker-interview/) (பார்வை நாள் 03.07.2021) நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமணைகளில் பணியில் இருக்கக் கூடிய சுகாதாரப் பணியாளர்களுக்கும்கூட ஒரு செவிலியருக்குக் கொடுக்கப்படக்கூடிய பாதுகாப்பு உபகரனங்கள் கொடுக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை உங்கள் சிந்தனையைத் தூண்டியுள்ளதென்றால் இதில் உள்ள நுண்அரசியலை எளிமையாகப் புரிந்துகொண்டீர்கள் எனலாம்.

            பாதுகாப்பாகப் பணியாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் விரைவாகவும் தரமானதாகவும் ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கக்கூடிய அரசு, சுகாதாரப் பணியாளர்கள் செய்யக்கூடிய பணி என்பதே ஆபத்து நிறைந்தது என்பதை அறிந்தும் அத்தகைய ஆபத்துகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியங்களையோ பாதுகாப்பாக அதே வேலையைச் செய்வதற்கான சாத்தியங்களையோ உருவாக்கிக் கொடுப்பதில் சுணக்கம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது. கொரோனாவை வெல்வதற்காக நிதி கேட்டு, வாங்கி ஆய்வுத் திட்டம் வகுத்துச் செயல்பட முன்வரும் அரசு மலக்குழி மரணங்களைத் தவிர்ப்பதற்காக எந்த ஆய்வுத்திட்டங்களையும் வகுப்பதில்லை. அப்படியே வகுத்தாலும் அவை வெற்றிகரமாக செயலாக்கம் பெறுவதில்லை.

            இன்னும் நுட்பமாக, அரசு இந்த குற்ற உணர்விலிருந்து / குற்றவுணர்வு ஏற்பட்டுவிடக்கூடாதென்று எளிதில் விடுபட்டுக்கொள்ளும் பொருட்டு, இந்த அடிமட்ட நிலையிலிருக்கக்கூடிய இந்தச் சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கக்கூடிய சுகாதாரப் பணியாளர்கள் அரசு வேலை என்ற நிலையிலிருந்து காண்ட்டக்டர்களிடம் தினக்கூலிகளாக இருத்தப்பட்டுள்ளனர். அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து இவர்களுக்குச் செய்துகொண்டிருந்த குறைந்த பட்சச் சலுகைகளும் இந்த அளவில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  இப்படியான சமூகப் பின்புலத்தில்தான், அறிவழகனின் ‘கழிசடை’ என்ற நாவல் இன்றைக்கு மீள்வாசிப்பிற்கான பிரதியாக சமூக, இலக்கியத் தளங்களில் புழக்கத்திற்கு வந்துள்ளது.

            நாவல், மலம் அள்ளக்கூடிய தூய்மைப் பணியாளர் பணியைச் செய்யக்கூடிய, விளிம்புநிலை மக்களில் ஒரு பகுதியினராக இருக்கும் சுகாதாரப் பணியாளர்களாக இருக்கக்கூடிய மனிதர்களின் வாழ்வியலை அனுமந்தையா, சுடலை என்ற இருவரின் வாழ்நிலையை முன்னிறுத்திப் பேசுகிறது. கதை, இரண்டு பகுதிகளாக விரிகிறது. முன்னது, அனுமந்தையாவின் வாழ்வியல் வழி சாக்கடை, மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் மனிதர்களையும் பின்னது, சுடலையின் வாழ்வியல் வழி வெட்டியான் தொழிலைச் செய்யக்கூடிய பிணம் எரிப்பவர்களின் அல்லது புதைப்பவர்களின் அன்றாடச் சிக்கல்களைப் பேசுகிறது. இவ்விருவேறு வகையான தூய்மைப்பணியாளர்களின் உடல் உழைப்பு மேலதிகாரிகளால் சுரண்டப்படுவதையும் அதிகாரிகளின் சுரண்டல் வடிவங்கள் தூய்மைப்பணியாளர்களின் உளவியலை கையறு நிலைக்குத் தள்ளக்கூடிய வகையில் வெளிப்படுவதையும் வெளிச்சப்படுத்துகிறது. இப்பிரதி, சுகாதாரப் பணியாளர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் இனவரைவியலாகவும் அமைந்துள்ளது. 

No comments:

Post a Comment

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...