Wednesday, February 3, 2021

குறுந்தொகை



குறுந்தொகை 


மருதத்திணைப்பாடல் - ஔவையார்

கூற்று  - வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக்கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது


 அரில்பவர் பிரம்பின் வரிப்புற நீர்நாய் 

வாளை நாள்இரை பெறூஉம் ஊரன்

பொன்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி 

எற்புறங் கூறும் என்ப; தெற்றென 

வணங்குஇறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் 

துணங்கை நாளும் வந்தன; அவ்வரைக் 

கண்பொர, மற்று அதன்கண் அவர் 

மணம்கொளற்கு இவரும் மள்ளர் போரே.


கூற்று விளக்கம் 

தலைவன் இற்பரத்தையாக ஒருத்தியைக் கொண்டிருந்தான். வேறொரு பரத்தையின் தொடர்பும் அவனுக்கு இருந்தது. புதியளான அவள் இற்பரத்தையைப்பற்றி ஏதோ புறங்கூறிப் பழித்துவிட்டாள். அதனைக்கேட்டதும் இற்பரத்தை ஆத்திரம் கொண்டாள். புதியவளின் தோழியர் கேட்குமாறு “தலைவன் தானே என்ன நாடி வருவான்” என இப்படிக் கூறுகின்றாள். 

உரை 

பின்னிக்கிடக்கும் பிரம்பங்கொடியைப்போன்ற கோடுகள் பொருந்திய முதுகையுடைய நீர்நாயானது வாளை மீன்களை நாள்தோறும் உணவாகப் பெறுகின்ற ஊருக்குத் தலைவன் அவன். பொன்னாலாகிய திரண்டு விளங்குகின்ற வளையல்களை அணிந்த தன்னைத்தானே தகுதியுள்ளவள் என்று சொல்லிக்கொள்ளும் சேரிப்பரத்தை என்னைப்பற்றிப் புறங்கூறினாள் எனச் சொல்லுகின்றாய், அவள் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது விளங்கும்படி, வளைந்த முன்கையும் மூங்கில் போன்ற தோள்களையும் உடைய ஒளி பொருந்திய வளையல்களையும் அணிந்த பெண்கள் துணங்கைக் கூத்தாடும் நாட்களும் வந்தன. அப்பொழுது ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண் மாறுபட்டு அத்துணங்கைக்கூத்தில் அம்மகளிரைத் தழுவிக்கொள்ளும் பொருட்டு, வீரர்களின் விளையாட்டுப்போரும் விருப்பத்தோடு நடைபெறும். 

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...