ஆளண்டாப் பட்சி என்னும்
விளிம்பை மையமாக்கும் இடைநிலைப் பிரதி
(மையங்கள்தான் விளிம்புகளைத் தீர்மானிக்கின்றன)
நிலப் பகிர்வில் வஞ்சிக்கப்பட்ட குடியானவன், பெரு நில உடமையாளனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடும் கதையை அடிப்படையாகக் கொண்டது பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி நாவல்.
நாவலின் கதைக்களத்திற்கு மையச்சரடாக இருப்பது குடியானவர் முத்துவின் வாழ்க்கை. இந்த மையத்தை அண்டிப் பிழைப்பதாக, ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவர்களின் பிரதிநிதியான குப்பண்ணாவின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் நிரம்பி இருக்கும் இவ்விரு கதாபாத்திரங்களில் ‘முத்து’ தான் நாயகன்.
அதாவது, ஆளண்டாப் பட்சி என்ற கற்பனைப் பறவையைக் குறியீட்டாக்கம் செய்கிற குடியானவர் முத்துவின் குடும்பம் - நிலம் தேடி, வாங்கி, பெரு நிலவுடமையாளனாக உயரும் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் முத்துவுக்கு உறுதுணையாக குப்பன் இருக்கிறார்.
எப்போதும் ஐயம் கொள்கிற அல்லது கொள்ளச் செய்கிற வாக்கியங்களை மட்டுமே உதிர்ப்பது அதிகார பீடத்தின் சிறப்பு அம்சம். அந்த அம்சத்தில் முழு தாத்பரியத்தையும் முத்துவின் சொல்லாடல்களில் (குறிப்பாக. நாவலின் இறுதிப் பகுதியில்) காண முடியும்.
வரலாறு நெடுகிலும் இந்தப் புறந்தள்ளப்பட்டவர்கள்தான் தள்ளுபவர்களை (அதிகார மையம்) அண்டிப் பிழைக்கிறதான / அண்டி தான் பிழைக்க வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுயமற்றவர்களாகவே கட்டமைக்கப்பட்ட இவர்களின் இயல்பான குணங்களாகவே விட்டுக் கொடுத்தல், எதற்கும் ஆசைப்படாதிருத்தல், எதிர்பாராதிருத்தல், சொத்தாசை இன்மை, அடங்கிப் போதல் போன்ற அடிமைப்புத்தி குணங்கள் அத்தனையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடிமைச் சாதியினனான குப்பண்ணனின் பாதங்களுக்கு கீழ் ஊறிய நீர் தானே என உணர்வு கொப்பளிக்கச் சொல்லும் அதே முத்து, பொதுவெளியில் இயங்கும் போது தன்னைச் சாதி கடந்த மனிதனாகக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
இது, சாதிய அடுக்கதிகாரமாயினும் பால்நிலை அதிகாரமாயினும் பொருந்துமாற்றை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
கழிவிரக்கம் கொள்ளச் செய்யும் படைப்பாளனின் மொழிநடையில் மைய அதிகாரம் உறைந்து கிடக்கிறது.
வழக்கம்போல, விளிம்பின் மொழி மறுக்கப்பட்டு அல்லது தன்வயப்படுத்திக் கொள்வதை இயல்பான ஒன்றாகக் கதைப்படுத்தி பிரதியாக்கம் நெய்யப்பட்டுள்ளது.
