ஜெயமோகனின் 'நூறு நாற்காளிகள் " - விளிம்பின் மொழி மீதான அத்துமீறல்
இன்றைய பின்காலனியச் சூழலில் காலனிய அதிகாரங்களுக்கு எதிரான விளிம்புநிலைச் சொல்லாடல்கள் முதன்மை பெற்று வருகின்றன. குறிப்பாகக் காலனியாதிக்கவாதிகளால் மொழியப்பட்ட காலனியப்படுத்தப்பட்ட மக்களின் மீதான கருத்தியல் கட்டமைப்புகள் இன்றைக்கு காலனியப்படுத்தப்பட்ட மக்களால் மாற்றி எழுதப்படுகின்றன. அதாவது காலனியப்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்கள் தங்களைத் தாங்களே எழுத முனைந்துள்ளனர். (அதற்கான சாத்தியத்தை பின்னைக் காலனியம் உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.)
அவ்வகையில், ஆரியக் கலாச்சாரக் காலனியர்களாலும் அவர்தம் உருவாக்கிய போன்மை மனிதர்களாலும் முன்வைக்கப்படும் விளிம்பு நிலை குறித்த கருத்தாக்கங்கள் இன்றைக்கு மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியது அவசியம் எனலாம். ஏனெனில் அப்போதுதான் காலனிய நீக்கத்திற்கான வழிமுறைகளைச் சமூகத்தளத்தில் உருவாக்க முடியும்.
அவ்வகையில், விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை முன்வைத்து புனையப்பட்ட ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் என்ற பிரதியும் கவனங்கொள்ளத்தக்க பிரதிகளில் ஒன்று. ஏனெனில் இப் பிரதி வெகுமக்களை அதிகம் ஈர்த்த, தொடர்ந்து அடுத்தடுத்து பதிப்பிக்கப்பட்ட பிரதி. அதற்குப் படைப்பாளனின் மொழி ஆளுமை முதன்மையான காரணங்களில் ஒன்று.
ஜெயமோகனின் கதை சொல்லும் மொழியானது பிரதியின் உள் அரசியல் தளங்களை வாசகன் எளிதில் இனங்காண முடியாத அளவுக்கு வாசகனின் மனதை ஈர்த்துக் கொள்ளும் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த தனித்தன்மை நூறு நாற்காலிகள் பிரதிக்கும் பொருந்தும்.
தனித்துவமான ஒரு பிரதியாக வாசிக்காமல், சிவகாமியின் உண்மைக்கு முன்னும் பின்னும் என்னும் நாவலுடனும் க. பஞ்சாங்கத்தின் ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் என்ற நாவல் உடனும் இணைத்து வாசிக்கும் போதுதான் அந்தப் பிரதி முன்வைக்கும் அரசியல் தன்மையை முழுமையாக உணரமுடியும் என்று கருதுகிறேன். ஏனெனில் அப்போதுதான் அந்த நாவல் (நூறுநாற்காளிகள்) ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எவ்வளவு கேவலமாகச் சித்திரித்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்
தமிழ் சமூகத்தில் ஒரு பழமொழியுண்டு. "நாயக் கொண்டு போய் நடுவூட்ல வச்சாலும் அதுக்கு நக்கித் திங்கற புத்தி போகாது" என்பர். ஜெயமோகன் அந்தப் படைப்பின் வழியாக இந்த பழமொழியை தான் நுட்பமாக கூறுகிறார். தாழ்த்தப்பட்ட இந்த சமூகம் மேன்மை பெறுவதற்கு இன்னும் நூறு நாற்காலிகள் தேவைப்படுகிறது என்கிறார்.
படைப்பாளனின் மொழி பாதிக்கப்பட்டவனின் மொழியாக வெளிப்படாமல் , குறைந்தபட்சம் அந்த பாதிப்பின் வீரியத்தைப் உணர்ந்ததாக வெளிப்படாமல் அதிகாரத்தின் மேடையில் அமர்ந்து கொண்டு கொண்டு வலியின் வேதனையில் கதறும் அவன் மீது பரிதாபம் கொள்ளும் தன்மையில் வெளிப்பட்டுள்ளது.
இன்னும் விரிவாகப் பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் அந்தப் பிரதிகளின் மீது உண்டு. அடித்தள மக்கள் ஆய்வு சார்ந்து நோக்கும்போது ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் என்ற பிரதியின் போதாமையை மிக நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியும் என கருதுகிறேன்

No comments:
Post a Comment