Saturday, September 22, 2018

செய்தி சேகரிப்பர்களின் இலக்கியாண்மை

செய்தி சேகரிப்பர்களின் இலக்கியாண்மை

இன்றைக்குச் சமூக மாந்தரினக் கண்களை ஈர்த்து தன்வசப்படுத்தி உள்ள கைப்பேசி உலகத்தை சுருக்கி விருந்தாக்கி கொடுத்துக்கொண்டு உள்ள சூழலில் ஒரு நிகழ்வு அல்லது ஒரு செய்தி உடனே சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்கிறது. அதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இது தவிர ஒவ்வொரு வீட்டின் இடத்தையும் ஆக்கிரமித்துள்ள தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களாலும் செய்திகள் உடனுக்குடன் வந்து சேர்கிறது. அதிலும் இன்றைக்கு செய்தி அலைவரிசைகளின் காலம் என்று சொல்லுமளவிற்கு செய்தி அலைவரிசைகளின் பெருக்கம் அதிகரித்து விட்டது. இவையெல்லாம் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் போட்டி போட்டுக்கொண்டு மக்களின் உணர்வுகளையும் வேட்கைகளையும் தூண்டி விட்டு செய்திகளை ஒரு வணிக பண்டங்களாக மாற்றிவிட்டுள்ளது.

இத்தகைய செய்தி ஊடகக் காலகட்டத்திலும் நாளிதழ்களின் செல்வாக்கு என்பது குறைந்து போனதாக இல்லை. அதாவது இன்றைக்கும் தினசரிகள் சமூகத்தை வாசிப்பதற்கான ஒரு திறவுகோலாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கான காரணம் காட்சி ஊடகங்களும் ஒலி ஊடகங்களும் முன் வைக்கும் செய்திகளின் நீதான மக்களின் நிலை நம்பிக்கையின்மை எனலாம். அதற்காக தினசரிகளில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை தன்மை நிரம்பியவை என்று பொருளல்ல. காட்சி ஊடகங்கள் மக்களின் கவனத்தை முதன்மைப்படுத்தும் வணிக அரசியலை உள்ளீடாகக் கொண்டு இயங்குவதை முதன்மையாக கொண்டுள்ளது என்றால் தினசரிகள் வேறு மாதிரியான அரசியலை உள்ளீடாகக் கொண்டு இயக்கம் கொள்கிறது. இது தினசரிகளில் செய்து சேகரிப்பாளர்களாக இருக்கும் செய்தி சேகரிப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தனிமனித அரசியலையும் சோம்பேறித்தனத்தையும் உள்ளீடாக கொண்டதாக இருப்பதை காண முடிகிறது.

உதாரணமாக, நகர்ப்புறங்களில் மாதந்தோறுமோ வாரந்தோறுமோ நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஒருவர் கொடுக்கும் அவரின் புரிதல் சார்ந்த மதிப்புரையை செய்தியாக, பார்த்தவுடன் கண்ணில் படும்படியான இடத்தில் பதிந்துவிடுகின்றனர். அச்செய்தியின் உண்மை தன்மை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் அச்செய்திகள் அந்நிகழ்வில் நடந்ததற்கும் அந்நிகழ்வில் நடந்ததற்கும் செய்தியாக வந்திருப்பதற்கு சிறிதும் தொடர்பில்லாதபடிக்கு தலைகீழாக்கம் செய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பேசிய பேச்சாளரின் சிறந்த பேச்சு ஏதுமில்லாத குப்பையாக அடையாளப்பட்டிருக்கும். இவர்கள் பெறும் கல்வி நிறுவனப் போர்வையில் நிலைகொண்டிருக்கும் வணிக நிறுவனங்கள் நடத்தும் இலக்கியத் நிகழ்வுகளில் கலந்துகொண்டு செய்தி சேகரிப்பைக் கூட பொருளீட்டுவதற்கான தன்மையில் நிறுத்திக் கொள்கின்றனர் .

பத்திரிகைகளில் வரும் இலக்கியம் சார்ந்த செய்திகளில் இத்தகைய போக்குகள் காணப்பட்டாலும் எல்லா செய்திகளையும் செய்தி சேகரிப்பாளர்களையும் இவ்வகைமைக்குள் இருத்தி மதிப்பிட முடியாது. காரணம், சில செய்தி சேகரிப்பாளர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் தவறாது கலந்து கொண்டு முறையாக செய்திகளை எடுத்துச் சென்றதையும் / செல்வதையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.

ஆக தினசரிகளிலும் காட்சி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் என வரும் செய்திகளை நாம் உண்ணும் தன்மை நிரம்பிய செய்திகளாக எடுத்துக்கொள்ள முடியுமா என்ற எண்ணம் வலுவாக தோன்றுகிறது.

No comments:

Post a Comment

இருளி - அதிகாரத்தை மறுதலிக்கும் பின்னைக் காலனியப் பிரதி

கல்வி அடித்தள மக்களின் வாழ்க்கையில் உருவாக்கிய பெரும் பெரும் மாற்றங்களைக் காட்டிலும் (அது முழுமையான மாற்றங்களை உருவாக்கி விடவில்லை என்றாலும...