Wednesday, September 19, 2018

சமூகக் கூட்டு நனவிலியின் அதிகாரத்தைக் கலைத்துப் போடும் க. வீரபாண்டியனின் தீராக்கடன் சிறுகதை.

சமூகக் கூட்டு நனவிலியின் அதிகாரத்தைக் கலைத்துப் போடும் க. வீரபாண்டியனின் தீராக்கடன் சிறுகதை.





ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான நிலவுடைமைச் சமூகச் சாதிக் காலனியாதிக்க வடிவங்களை முதன்மைப்படுத்தும் முதல் தலைமுறை தலித் இலக்கியப் போக்கினைத் தொடர்ந்து முதலாளிய, உலகமய, நகர்மயச் சூழலில் துப்புரவுப் பணியாளர்களாகவும் கடைநிலை ஊழியர்களாகவும் தினக்கூலிகளாகவும்  ஓரங்கட்டப்பட்டு, சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறை வடிவங்களை இரண்டாம், மூன்றாம் தலைமுறை தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் தனக்கான பேசுபொருளாக்கி வருகின்றன. அவ்வகையில், தீராக்கடன் என்ற சிறுகதை, ராமன் - சின்னு என்ற இரு தலித் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை முன்வைத்து அதிகார வடிவங்களை அடையாளப்படுத்துகிறது. தீராக் கடனாக தலைமுறை தலைமுறையாக அம்மக்களின் உழைப்பைச் சுரண்டி வரும் கந்து வட்டியின் கொடூர முகத்தை வெளிச்சப்படுத்துவது கதையின் மையச் சரடு. 

அடித்தட்டு மக்களின் ஆழ்மனதில் அடிமைப் புத்தியைக் கட்டமைக்கும் செயற்தளங்களில் பொருளாதாரமும் முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சமூகத்தைப் பொருத்தமட்டில் சாதியப் படிநிலை அமைப்பு அப்பொருளாதார வளத்தை விளிம்பின் விளிம்புநிலை மக்கள் பெற்றுவிடாமல் பாதுகாத்து அடிமையுடல்களைச் சேவையுடல்களாக சாதி அடையாளத்துள் புதைத்து சுரண்டிவருகிறது. ஐரோப்பியக் காலனியாதிக்கம் இந்த சாதியப்பின்னலுக்கு நவீனமுகம் கொடுத்து தலித் பொருளாதார வளர்ச்சியில் முட்டுக்கட்டை போட்டது. ஐரோப்பியக் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய விளிம்புநிலை மக்களின் முதலாளி - தொழிலாளி வர்க்க பொருளாதார வரவுகள் நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் நுழைய முற்பட்டு வட்டிக்கு வட்டி கட்டும் கந்துவட்டிக் கலாச்சாரப் போக்கால் மனச்சிதைவுக்கு ஆளாக்கி வருகிறது.
சுய வதைப்புப் போராட்டங்களும்  சுய அழிப்புப் செயல்பாடுகளும் தினசரிகளின் பக்கங்களை நிரப்பியும் காட்சி ஊடகப் பசிக்கு தீனியிட்டும் வருகின்ற இன்றைய சூழலில்  க. வீரபாண்டியனின் 'தீராக்கடன் ' என்ற சிறுகதை சமூகக் கூட்டு நனவிலி மனதின் ஆதிக்கத்தை வெளிச்சப்படுத்துவதாக இருக்கிறது


சின்னுவின் மீதான கந்து வட்டிக்காரன் வழிவிட்டானின் உடல், உளவியல் சார்ந்த ஒடுக்குமுறைக்கு  எதிராகப் பீறிட்டுக் கிளம்பும் கலகக் குரலும் ராமனின் அகநிலைக்குரலும் விளிம்புநிலை அரசியலின் முதன்மைச் செயல்பாடுகள். 
சின்னுவின் கலகக் குரல், தலித்துகளின் மீதான அதிகார வர்க்கத்தின் பொதுபுத்திகளை உடைத்தெறிகிறது. 

ராமன் போன்ற காதாபாத்திரங்கள் ஆண்களின் வெளி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதாகவும் உள்ளூர அதிகாரத்தை எதிர்க்கும் தறுவாயை எதிர்நோக்கியுள்ளதாகவும் புனையப்பட்டுள்ளது.
இறுதியில், படைப்பாளியால் கந்து வட்டிக்காரனுக்குக் கொடுக்கப்படும் தண்டனையும் ராமனின் அகமகிழ்ச்சியும் ஆதிக்கம் அழிந்து போவதால் மற்றமைகளின் மனதில் உருக்கொள்ளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 



ஜோ.செ. கார்த்திகேயன்.
ப. சின்னச்சாமி

No comments:

Post a Comment

இருளி - அதிகாரத்தை மறுதலிக்கும் பின்னைக் காலனியப் பிரதி

கல்வி அடித்தள மக்களின் வாழ்க்கையில் உருவாக்கிய பெரும் பெரும் மாற்றங்களைக் காட்டிலும் (அது முழுமையான மாற்றங்களை உருவாக்கி விடவில்லை என்றாலும...