சாதிக் காலனியத்தின் நுண் தளங்களோடு ஊடாடும் - கூளமாதாரி
பெருமாள் முருகனின் "கூளமாதாரி" நாவல் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்று என்ற நிலைபாட்டினை என்னுள் ஏதென்றுணர முடியாதவொரு இலக்கியப்புலம் உண்டாக்கி வைத்திருந்தபடியால் அதற்கான தருணம் நோக்கிய நகர்வில் மைல்கல்லைத் தொட்டு, அதன்மீதே ஏறி அமர்ந்து வாசித்து முடித்திருக்கிறேன்.
மூன்று பாகங்களைக்கொண்ட இந்நாவல் விளிம்புநிலைப் பார்வையை முதன்மைப்படுத்தி நேர்கோட்டுக் கதை சொல்லல் முறையில் இயக்கம் கொள்வதான உணர்வை தடையின்றி வாசகனுக்குக் கொடுக்கும் தன்மையில் தொய்வின்றி நகர்கிறது.
நிலவுடைமைச் சமூகத்தின் அடிப்படை அலகான கிராமம் என்ற சாதிய நிறுவனத்தில் உயர்சாதிகளாக/இடைச் சாதியினரில் வல்லாதிக்கம் நிரம்பப்பெற்ற பார்ப்பனப் போன்மை மனிதர்களான கவுண்டர்களுக்கு ஆடு மேய்ப்பதற்காக பெற்றோர்களால் பேரம்பேசி (சும்மா பேருக்கு) அடமானம் வைக்கப்பட்ட சக்கிலியச் சாதிச் (அருந்ததியர்) சிறுவர்களின் மேய்ச்சல் பொழுதுகளையும் அவர்களின்மீது ஏவப்படும் கவுண்டர்களின், கவுண்டச்சிகளின் ஆதிக்க குணங்களையும் அவ்வதிகாரங்களை புறத்தே ஏற்றும் அகத்தே பொருமியும் இயக்கம்பெரும் சிறுவர்களின் உளவியலையும் பேசுகிறது.
வாசிப்பில் சற்று சுரத்து குறைவுதான் என்ற உணர்வு இயல்பாய் மேலோங்கினாலும் அந்தச் சுரத்தை வரையறுக்க முனையும்போது தடுமாற்றம் ஆட்கொள்கிறது. ஆடு மேய்க்கும் சிறுவர்களின் புழங்குவெளி ஆதிக்க வர்க்கத்தின் வரையறைக்கு உட்பட்டதாய், எப்போது வேண்டுமானாலும் அதிகார இயந்திரத்தில் அரைபடும் வகையில் இயக்கம் பெற்றுள்ளதை நுட்பமாக விவரித்துச் செல்கிறது. இத்தன்மை எலியா கானெட்டியின் பூனைக்கும் எலிக்குமான உறவுமுறை பற்றிய வரையறையை ஒட்டியதாக உள்ளது. ( பார்க்க; அதிகாரத்தின் மூலக்கூறுகள்) அச்சிறுவர்களின் வரையறுக்கப்பட்ட அவ்வெளிக்குள்ளான விளையாட்டுகளில் கவுண்டர் சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் இணையும்போது எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் நுட்பமாகக் கதையாக்கம் பெற்றுள்ளது.
கூளையனும் வயிறியும் கதையின் இயக்கத்திற்கான இரு துருவங்கள். நொண்டி , நெடும்பன் , செவிடி, செல்வன் (கவுண்டரின் மகன்) போன்றோர் கதையின் பரந்த பின்னலுக்கு அடித்தளம். செல்வனைத் தவிர்த்த மற்ற ஐந்து பாத்திரங்களும் இணைந்து தங்களுடைய கட்டு வெளிக்கு உட்பட்ட ஆடுகளின் மேய்ச்சல்வெளியை தீர்மாணித்துவிட்டு தங்கள் பொழுதுகளை எப்படிக் கடத்துகின்றனர் என்பது கதை வெளி. அத்தகைய பொழுதுகளில் அச்சிறுவர்களின் உணவுப் போதாமையை இட்டு நிரப்பும் சிறு சிறு திருட்டுகள் ( நிலக்கடலை திருடுதல்), மீன்பிடித்து உண்ணுதல், வெள்ளை எலியை பிடித்து நெருப்பிலிட்டு உண்ணுதல், பாழுங்கிணற்று நீர்க்குளியல் தருணங்கள், விளையாட்டுகள், அவர்களுக்குள் உண்டாகும் முரண்பாடுகள், பாலியல்சார் வேட்கைகள், சண்டைகள், கேலி, கிண்டல்கள் போன்றவை மிக எதார்த்தமாகக் கதையாக்கம் பெற்றுள்ளன. அத்தகைய ஆடுகளுக்கான கட்டுவெளியில் உடைப்பு ஏற்படும்போது நடந்தேறும் ஆதிக்கவர்க்கத்தின் அதிகார வெறியாட்டம் தாழ்த்தப்பட்ட சிறுவர்களின் உடல்கள்மேல் கீறல்களை வாரி இறைப்பதோடு நின்றுவிடாமல் அவ்வுடல்களை நிரந்தர சேவை உடல்களாக மாற்றும் எண்ணத்தில் வீறுகொண்டு நுகர்வதை பதிவு செய்கிறது.(கூளையனின் கண்கானிப்பிலிருந்த ஆடு திருடப்படும் போதும் நெடும்பனின் கட்டுக்குள்ளிருந்து விலகி சொக்குப்பயிரை உண்டு மூன்று ஆடுகள் இறந்த போதும்) அத்தகைய செயல்பாடுகளுக்கு மத்தியில் உருப்பெரும் சாதிய அதிகாரத்திற்கு எதிரான கலக உணர்வுகள் கலகக் குரல்களாகவும் செயல்பாடுகளாகவும் வெளிப்படாதபடிக்கு புனைவாக்கம் பெற்றுள்ளது. இத்தன்மை ஜாகிர்ராஜாவின் புனைவு வெளியோடு ஒத்த தன்மை கொண்டதாக இருப்பதனை உணர முடிகிறது. படைப்பாளளின் இத்தன்மையிலான கதை சொல்லல் முறைமை படைப்பாளனின் படைப்பாக்க அரசியலை, அதாவது கலகத்தை மனதிற்குள்ளேயே இருத்திக் கொள்ளும்படி புனைந்ததன் ஆதிக்க படைப்புமன அரசியலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதனை கூளையன், நெடும்பன், வவுறி ஆகியோரின் புலம்பல்கள் உணர்த்துகிறது. படைப்பாளியின் இத்தன்மை பின்காலனிய நாடுகளில் தோற்றம்பெற்று தொடர்ந்து இயக்கம்பெறும் இலக்கியங்களை மூன்று கட்டங்களில் வகைப்படுத்தி வாசிப்பை நிகழ்த்தும் (காண்க. ஒடுக்கப்பட்டோர்: விடுதலையின் வடிவங்கள்) ஃபனானின் பார்வை வழியே காணும்போது இரண்டாம் கட்ட இலக்கிய வகைமையில் முடங்கியுள்ளதை தெளிவுபடுத்துவதாக இருக்கிறது.
நாவலின் இரண்டாவது பகுதி கூளையனுடன் தொண்டுப் பட்டிக் காவலுக்குச் செல்லும் செல்வனுடனான உறவுநிலையையும் அவர்களின் நடத்தைகளையும் அதில் இயல்பாகவே புரையோடிக்கிடக்கும் அதிகார / ஆதிக்க வெளிப்பாட்டையும் சிதிலமாகிப்போகும் அவ்வாதிக்க முகங்களின் வடிவங்களையும் காட்சிகளாக ஓவியந்தீட்டுகிறது. இரு சிறுவர்களின் இரவு நேரப் பட்டிக் காவலில் இயல்பாக உருக்கொள்ளும் செல்வனின் பயம் சார்ந்த காட்சிகளில் கூளையன் திடமானவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் பின்பு பயத்தால் (கடவுள்சார் பயமாக புனை வேடமூட்டப்பட்டு) படுக்கையில் சிறுநீர் கழித்துவிடும் செயல்பாடும் பய உணர்வை நியாயப்படுத்தும் பாங்கோடும் வாசகமனங்களுக்கு நகைச்சுவை ஊட்டும் பாங்கோடும் சமைக்கப்பட்டிருப்பதுபோலத் தோன்றினும் அதனுள் படைப்பாளனின் சாதிய ஆதிக்க மனோபாவம் ஊடாட்டம் கொண்டிருப்பதனை உணர்த்தத் தவறவில்லை.
சினிமா காண்பதற்காக செல்வன் கூளையனை வற்புறுத்தும் காட்சிகளும் அவனின் ஆழ்மன வேட்கையை உயிர்த்தெழச் செய்யும் உளவியல் சார்ந்த ஆதிக்க வெளிப்படுத்தலும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்க மனநிலையை உணர்த்துவதாய் கதையாக்கம் பெற்றுள்ளமை படைப்பாளியின் எதார்த்தப் பிரதிபலித்தலின் நுட்பம் வெளிப்படுகிறது. கதை இறுதியாக செல்வனின் சொற்களால் காயம் பெற்று கோபத்தின் உச்சம் தொட்ட கூளையன் கிணற்று நீரில் செல்வனை மூழ்கடித்துக் கொன்று விடுவதான முடிவை வாசகன் அனுமானித்துக் கொள்வதற்கான திறப்பைக் கொடுத்து நிறைவு பெறுகிறது. கூளையன் மீது வரையறையின்றி ஆதிக்கச் சாதியினனான கவுண்டரின் அவரது குடும்பத்தாரின் அட்டூழியங்களுக்குச் சிறு எதிர்ப்பும் காட்டாத கூளையன் வவுறியுடன் இனைத்துத் தவறாகப் பேசியதற்காகச் செல்வனை கொல்லுகிறான் என்பது தலித்துகளின் மீதான மிகு புனைவாகப்படுகிறது.
சுயசாதி பரிசோதனையை பிரதி வழி படைப்பாளன் நிகழ்த்திக் காட்டினாலும் அவற்றிலும் சாதி ஆதிக்கத்தனம் குடிகொண்டிருப்பதை உணரத்தான் செய்கிறது. என்றாலும் இத்தகைய சுயசாதி விமர்சன எழுத்துகள் வரவேற்கத்தக்கதாயும் பாராட்டப்படத்தக்கதாயும் கவனம்பெற வேண்டிய தேவையுண்டு என்பதை தலித்திய விமர்சகர்கள் உணர்வர். ஆனாலும் இத்தகைய படைப்புகள் சாதி அதிகாரத்தைப் புத்தாக்கம் செய்வதான அபாயம் நிறைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

No comments:
Post a Comment