அர்த்தங்களைத் தள்ளிப்போடும் வாசகப் பிரதி - இரா.முருகனின் இசக்கி
தீராநதி (பிப்ரவரி 2018) இதழில் இரா.முருகனின் 'இசக்கி', அ.மலர்மதியின் 'மொய்ப்பணம்!' ஆகிய இரண்டு சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
பொருளாதார வலிமையற்ற உடல்வளம் குன்றிய தந்தை தன் மூன்று மகள்களில், சமூகப் பார்வையில் குறையுடல் கொண்ட முதல் மகளிற்கு மொய்ப்பண வரவை நம்பி, கடன் வாங்கிச் செய்யத் துணிந்த திருமண ஏற்பாட்டில் தொடங்கி அதனால் அத்தந்தை எதிர்கொள்ளும் மன அழுத்தங்களையும் மொய்ப்பண ஏமாற்றம் கொடுத்த மனவலியையும் தந்தையின் பார்வையில் 'மொய்ப்பணம்' கதை முன்வைக்கிறது. தந்தையின் நிலையுணர்ந்த மகளின் மன ஓட்டங்களை சமூக இழிவின் தாத்பரியங்களோடு கதை புனைவாக்கம் செய்துள்ளது.
தொழில்நுட்ப உதவியோடு காப்பி கலக்கத் தெரியாமல் அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனியார் துறை ஒன்றில் உள்ள கடையில் வேலைக்குச் சேர்ந்து ஒரே மாதத்தில் அந்தத் தொழில்நுட்பக் கருவிகளைக் கலைத்து சரிசெய்து காப்பி கலக்கும் அளவுக்கு திறன் கொண்டவளாக மாறுகிற இசக்கி என்ற பெண்னின் வாழ்வை மையமாகக் கொண்டது 'இசக்கி' எனும் கதை . காப்பி கலக்கும் திறனால் ஏராளமான யானைக் கூட்டங்களும் நீர்நாய்களும் அந்த கட்டிடத்தினைச் சுற்றிப் பறந்தபடி இருக்கிறது. இசக்கியின் வாழ்வை ஊடறுத்துச் செல்லும்
ரோஷ்ணி, கிரண் என்ற இருவரின் பங்களிப்புகளோடு விரியும் கதையில் இசக்கியைச் சுற்றிச் சுற்றி வரும் ஆண் கூட்டத்திற்கு மத்தியில் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ரோஷ்ணி மீது மட்டும் வேட்கை கொண்டு தனது அலுவலகப் பணியைச் செய்துகொண்டிருக்கும் கிரண், கணவனோடு இங்கிலாந்தில் தங்கி கணிப்பொறித் தொழில்நுட்ப வேலை பார்க்கும் ரோஷ்ணி, அவளது கிரண் மீதான காதல் என கதை இச்சமூகம் கூடா ஒழுக்கங்களாக முன்வைக்கும் கருத்தியல்களை மாற்றுக்கோணத்தில் புனைவாக்குகிறது. ஒரு சமயம், மின்சாரம் தாக்கியதால் கத்திக் கொண்டிருக்கும் இசக்கியை காப்பாற்றும் கிரணுக்கு சினிமாப்பாணி காதல் தோன்ற இருவரும் கணவன் மனைவியாக வாழ்கின்றனர். ரோஷ்ணி கடல் நாரை பறந்து சென்றதை டுவிட்டரில் பதிந்துவிட்டு கிரண் சீட்டில் அமர்ந்து வேலை பார்க்கிறாள்.
இரண்டுமே பெண்ணியத்தை மையப்பொருண்மையாகக்கொண்ட சிறுகதைகளாக வாசிப்பதற்கு இடம் கொடுக்கத்தான் செய்கின்றன. அதிகம் விவாதிக்கப்பட்ட சமூக இழிவை அதன் புதுப்பரிணாமங்களோடுதான் பேசுகிறது. என்றாலும் இரா. முருகனின் இசக்கி அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய கதையாகப்படுகிறது.
கதை எளிமையான நேர்கோட்டுக்கதை சொல்லும் முறைமையில் குறியீட்டுத் தன்மையோடு மொழியாடப்பட்டுள்ளது. இசக்கி , ரோஷ்ணி, கிரண் என்ற மூவரின் கதை. நமக்குப் பிடித்தமான / பழகிப்போன முக்கோணக் காதல் கதை என்று கூட வாசித்துக் கொள்ளலாம். அல்லது எல்லா காலங்களிலும் பெண் என்ற உயிரி ஆல்ஹகால் நிரம்பிய சதைக்குப்பியாக ஆணுக்கு இன்றும் போதைக்கான பாணமாக இருப்பதனைத்தானே பேசுகிறது என்று மிகச் சாதாரணமாகக்கூட கடந்து செல்லலாம். அல்லது காப்பி விற்பவளாக இருந்தாலும்சரி கம்யூட்டர் வேலை பார்ப்பவளாக இருந்தாலும்சரி கிரண்களுக்கு கிளுகிளுப்பூட்டக் கூடியவர்கள்தான் என்ற எண்ணத்தை காட்டிக் கொள்ளாமல் நகர்ந்துவிடலாம்.
வாய்மொழிக் கதையாடலில் இடம்பெறும் இசக்கியின் (இசக்கியம்மன் கதை) புனிதம் இந்த நவீன யுகத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு அதன் புனிதத் தன்மை காக்கப்படுவதாகவும் அல்லது உள்ளார்ந்துள்ள குற்றவுணர்ச்சிக்கான வடிகால் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதாகவும் வாசிக்கலாம். (அது அந்த படைப்பாளனின் நனவிலி இருப்பைப் பொருத்து.) நரண் என்ற ஆண் உடல் சமூகக் கற்பிதங்களின்படி தூய்மையுடலுடன்தான் இணைய வேண்டும் என்ற ஆணாதிக்க மனத்தின் வெளிச்சப்பாடாகவும் வாசிக்கலாம்.
அதுவாசகப் பிரதிதானே என்பதை மட்டும் வழக்கமான முணுமுணுப்பாக இல்லாமல் பிறர் செவிமடுக்கச் சொல்லிச் செல்லிவிடுவது உசிதம். ஏனெனில், (ஒருவேளை ) மொய்ப்பணம் நம்முடைய சட்டைப் பைகளையாவது நிரப்பக்கூடும்.
ஜோ.செ.கார்த்திகேயன்
No comments:
Post a Comment